

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 3 நாள் பயணமாக ஒடிசா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களுக்கு நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் .
ஒடிசாவின் பாரிபடாவில் நடைபெறும் அகில இந்திய சந்தாலி எழுத்தாளர் சங்கத்தின் 36-வது ஆண்டு மாநாடு மற்றும் இலக்கிய விழாவின் தொடக்க நிகழ்வில் நவம்பர் 20-ம் தேதி குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். அதே நாளில், குலியானாவில் ஏகலைவியா மாதிரி உறைவிடப் பள்ளியையும் அவர் திறந்து வைக்கிறார்.
பஹத்பூர் கிராமத்தில் திறன் பயிற்சி மையத்தை நவம்பர் 21 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திறந்து வைப்பார். அதைத் தொடர்ந்து, பதம்பஹார் ரயில் நிலையம் செல்லும் அவர், மூன்று ரயில்களைக் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். புதிய ரைரங்பூர் அஞ்சல் கோட்டம் திறப்பு, ரைரங்பூர் அஞ்சல் கோட்டத்தின் நினைவு அட்டை வெளியிடுதல் ஆகிய நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கிறார்.
தொடர்ந்து, பதம்பஹார் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பதற்கான திட்டப்பணிக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அவர் பதம்பஹரில் இருந்து ரைரங்பூருக்கு பதம்பஹார்-ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்கிறார். அன்று மாலை, புர்லாவில் உள்ள வீர் சுரேந்திர சாய் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் 15வது ஆண்டுப் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார்.
நவம்பர் 22 ஆம் தேதி, சம்பல்பூரில் உள்ள பிரம்ம குமாரிகள் ஏற்பாடு செய்துள்ள புதிய இந்தியாவுக்கான புதிய கல்வி என்ற தேசிய கல்விப் பிரசாரத்தைக் குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார். பின்னர் ஆந்திரப் பிரதேச மாநிலம் புட்டபர்த்தி செல்லும் குடியரசுத் தலைவர், அங்கு ஸ்ரீ சத்ய சாய் உயர்கல்வி நிறுவனத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.