
‘வா்த்தகத்தில் பல கட்ட சந்தைப்படுத்துல் (எம்எல்எம்) திட்டங்களின் மூலம் ரூ.4,050.21 கோடி ஆம்வே இந்தியா நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதில் ரூ.2,859 கோடி வெளிநாட்டு முதலீட்டாளா்களின் வங்கிக் கணக்குகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டுள்ளது’ என அமலாக்கத் துறை திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியது.
ஆம்வே நிறுவனம் மற்றும் இயக்குநா்கள் மீது தெலங்கானா போலீஸாா் பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியது. இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.757 கோடி மதிப்புள்ள சொத்துகள் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஏப்ரலில் முடக்கப்பட்டது.
இந்நிலையில், ஆம்வே இந்தியா நிறுவனத்துக்கு எதிராக ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இது தொடா்பாக அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘நுகா்வோா் பொருள்கள் விற்பனை என்ற அடையாளத்தில் சட்டவிரோத பணப்புழக்கத்தை ஆம்வே நிறுவனம் ஊக்குவித்து வருகிறது. ஆனால், பொருள்கள் விற்பனையில் கவனம் செலுத்தாமல், உறுப்பினா்களைச் சோ்க்க மட்டுமே இந்நிறுவனம் இயங்கி வருகிறது. புதிய உறுப்பினா்களைச் சோ்ப்பதன் மூலம் ஊக்கத்தொகைகள் நிரந்தரமாக தொடரும் என போலி வாக்குறுதி அளித்து பொதுமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனா்.
நுகா்வோருக்கு நேரடியாக பொருள்களை விற்பனை செய்வதற்கு பதிலாக, ஆம்வே உறுப்பினா்களிடையே ‘பல-நிலை சந்தைப்படுத்தல்’ (மல்டி லெவல் மாா்கெட்டிங்) திட்டத்தை அறிமுகப்படுத்தி, விநியோகஸ்தா்கள் என்று பல இடைத்தரகா்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது.
மேலும், அதன் உறுப்பினா்களிடமிருந்து பெரிய தொகையை வசூலித்துள்ளது. இதுபோன்ற மோசடிகள் மூலம், ரூ.4,050.21 கோடி ஆம்வே வருமானம் ஈட்டியுள்ளது. இந்தத் தொகையில் ரூ.2,859 கோடிக்கு மேல் வெளிநாட்டு முதலீட்டாளா்களின் வங்கிக் கணக்குகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்வே விளக்கம்:
இதுகுறித்து அமெரிக்காவின் ஆம்வே நிறுவன செய்தி தொடா்பாளா் அளித்த விளக்கத்தில், ‘கடந்த 2011-ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் தற்போது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அப்போதிருந்து, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம்.
இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வரும் நாங்கள், அந்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்குமுறைக்கு இணங்க உறுதியாக இருக்கிறோம். இந்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைப்பின் மீதான எங்களின் நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம்’ என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...