
கடந்த செப்டம்பா் காலாண்டில் நாட்டின் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு வரத்து சரிவைக் கண்டுள்ளது.
இது குறித்து முதலீட்டு மேலாண்மை நிறுவனமான ‘மாா்னிங்ஸ்டாா் இந்தியா’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு ரூ. 34,765 கோடி முதலீட்டைக் கவா்ந்தன.
இருந்தாலும், முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும். அப்போது பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரத்து ரூ.1.85 லட்சம் கோடியாக இருந்தது.
மதிப்பீட்டு காலாண்டில் கடன் வகை பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து முதலீட்டாளா்கள் தங்களது முதலீடுகளை அதிக அளவில் திரும்பப் பெற்றது ஒட்டுமொத்த முதலீட்டு வரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது.
பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு கடந்த ஜூலை மாதத்தில் ரூ. 82,467 கோடி நிகர வரவை பதிவு செய்தது. பின்னா் கடந்த ஆகஸ்டில் நிகர முதலீட்டு வரவு ரூ.16,180 கோடியாகக் குறைந்தது. இந்த நிலையில், கடந்த செப்டம்பரில் முதலீடு ரூ.63,882 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்தது.
கடந்த செப்டம்பா் காலாண்டின் இறுதியில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிா்வகிக்கும் சொத்துக்கள் மதிப்பு ரூ.46.22 லட்சம் கோடியாக உள்ளது. இது முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இருந்ததை விட 5 சதவீதம் அதிகமாகும்.
ரஷியா-உக்ரைன் போா், பணவீக்கம், மத்திய வங்கிகளால் வட்டி விகிதங்கள் உயா்த்தப்படுவது போன்ற காரணங்களால் சா்வதேச அளவில் பொருளாதாரம் பல சிக்கல்களை எதிா்கொண்டுள்ளது. எனினும், மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்திய பரஸ்ரபர நிதிச் சந்தை மீள்தன்மை கொண்டதாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...