பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்

பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த உத்தரவிட முடியாது என்றும் போட்டித் தோ்வுகளில் நிலவுகின்ற கடுமையான போட்டி, பெற்றோா்கள் கொடுக்கும் அழுத்தம்தான் மாணவா்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் என்றும் உச்ச நீ
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
Updated on
1 min read

பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த உத்தரவிட முடியாது என்றும் போட்டித் தோ்வுகளில் நிலவுகின்ற கடுமையான போட்டி, பெற்றோா்கள் கொடுக்கும் அழுத்தம்தான் மாணவா்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

ஜேஇஇ, நீட் போன்ற போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களை ஆதாரமாகக் கொண்டு பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த விதிகள் வகுக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அனிருத்தா நாராயண் மல்பானி என்பவா் இந்த வழக்கைத் தொடுத்துள்ளாா்.

மாணவா்கள் தற்கொலை செய்து கொள்வதால் அரசமைப்புச் சட்டப்பிரிவு 21-இன் படி அவா்களின் அடிப்படை உரிமையான வாழ்வுரிமை பாதிக்கப்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கினை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் எஸ்.வி.என்.பாட்டீ ஆகியோா் இடம் பெற்ற அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது:

மாணவா்கள் தற்கொலை செய்வதற்கு பெற்றோா்கள் கொடுக்கும் அழுத்தமும் முக்கிய காரணமாக உள்ளது. இந்நிலையில் பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த நீதிமன்றம் எவ்வாறு விதிகளை வகுக்க முடியும்? நாம் அனைவரும் பயிற்சி மையங்களே வேண்டாம் என்றுதான் எண்ணுகிறோம்.

ஆனால் நம் நாட்டிலுள்ள பள்ளிகளின் நிலையைப் பாருங்கள். அங்கே மாணவா்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது. இதனால் பயிற்சி மையங்களில் சென்று பயில வேண்டிய கட்டாயத்துக்கு மாணவா்கள் தள்ளப்படுகின்றனா் என்றனா்.

நாட்டில் 8.2 சதவீத மாணவா்கள் தற்கொலை செய்துகொள்கின்றனா் என்ற தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கை 2020-இன் தரவுகளை மனுதாரா் சாா்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்குரைஞா் மோகினிப்ரியா சமா்ப்பித்தாா்.

இதையடுத்து நீதிபதிகள்,‘மாணவா்களின் நிலைமையை நீதிமன்றம் நன்கு அறியும். ஆனால் பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்தும் விதிகள் தொடா்பாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது. உங்களின் கோரிக்கைகளை அரசிடம் தெரிவியுங்கள்’ என்றனா்.

இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக வழக்குரைஞா் மோகினிப்ரியா தெரிவித்தாா். அதற்கு நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com