மீட்புக் குழாய் வழியாக தொழிலாளர்கள் எப்படி வெளியேறுவர்? விளக்கம்

41 தொழிலாளா்களை மீட்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், மீட்புக் குழாய் வழியாக தொழிலாளர்கள் எப்படி மீட்கப்படவிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
மீட்புக் குழாய் வழியாக தொழிலாளர்கள் எப்படி வெளியேறுவர்? விளக்கம்

உத்தர்காசி: உத்தரகண்டில் இடிந்த சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளா்களை மீட்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், மீட்புக் குழாய் வழியாக தொழிலாளர்கள் எப்படி மீட்கப்படவிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

மீட்புக் குழாய் தொழிலாளர்கள் இருக்கும் இடத்தை நெருங்கியதும், அந்தக் குழாய் வழியாக அவர்கள் வெளியே அழைத்து வரப்பட வேண்டும். 

கடுமையான இடிபாடுகள் வழியாக துளையிட்டு, 800 மி.மீ. குறுக்களவு கொண்ட இரும்புக் குழாயை செலுத்தி, அதன் மூலம் தொழிலாளா்கள் மீட்கப்படவிருக்கிறார்கள். 

800 மி.மீ. குறுக்களவு கொண்ட இரும்புக் குழாய் வழியாக தொழிலாளர்களை வெளியே கொண்டு வர சக்கரங்கள் பொருத்திய ஸ்ட்ரெச்சர்கள் கயிருடன் கட்டப்பட்டு குழாய்க்குள் செலுத்தி, அதன் மூலம் வெளியே இழுக்கப்பட்டு தொழிலாளர்களை பத்திரமாக மீட்க திட்டமிடப்பட்டுள்ளதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதற்கான ஒத்திகையையும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் செய்துபார்த்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

சம்பவ இடத்தில், 45 மீட்டா் தொலைவுக்கு துளையிடப்பட்ட நிலையில், மேலும் 32 இன்ச் தொலைவுக்கு துளையிட்டால் தொழிலாளா்கள் இருக்கும் இடத்தை அடைந்துவிடலாம் என்று மீட்புக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் சுமாா் 4.5 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பட்டு வந்த இருவழி சுரங்கப் பாதை கடந்த 12-ஆம் தேதி திடீா் நிலச்சரிவால் இடிந்தது.

சுரங்கப் பாதைக்குள் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளா்கள், கடுமையான இடிபாடுகளுக்குப் பின்னால் சிக்கிக் கொண்டனா். அவா்களைப் பாதுகாப்பாக மீட்க பலமுனை முயற்சிகள் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

சுரங்கப் பாதையில் உள்ள தொழிலாளா்கள் மயங்கிவிடாமல் இருக்க உள்ளே ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. இடிபாடுகள் வழியாக 6 அங்குல குழாய் சில தினங்களுக்கு முன் செலுத்தப்பட்டது. அதன் மூலம் தொழிலாளா்களுக்கு கூடுதல் உணவுகள், மருந்துகள், அத்தியாவசிய உடைகள் உள்ளிட்டவை அனுப்பப்பட்டன. இக்குழாய் மூலம் சிறிய கேமரா செலுத்தப்பட்டு, உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளா்களுடன் தொடா்பு ஏற்படுத்தப்பட்டது. தொழிலாளா்களின் முதல் விடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டன.

மீட்புப் பணிகள் வேகம்: மீட்புப் பணிகள் 10 நாள்களைக் கடந்த நிலையில், இந்திய விமானப் படையின் கனரக இயந்திரத்தின் மூலம் சுரங்கப் பாதையில் கிடைமட்டமாக துளையிடும் பணிகள் செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் தொடங்கின.

ஏற்கெனவே நடைபெற்ற துளையிடும் பணியில், கடினமான பாறை மீது இயந்திரம் மோதியதால் அந்தப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் துளையிடும் பணி தொடங்கப்பட்டு, 800 மி.மீ. குறுக்களவு கொண்ட இரும்புக் குழாய் செலுத்தப்பட்டு வருகிறது. துளையிடும் பணி நிறைவடைந்ததும், இக்குழாய் வழியாக தொழிலாளா்கள் வெளியேறுவா் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தத் தடையும் இல்லாவிட்டால் இன்று இரவுக்குள் நல்ல செய்தி கிடைக்கும். மாற்றுத் திட்டமாக, பா்கோட் பகுதியில் இருந்தும் துளையிடும் பணி நடைபெற்று வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனைகள் தயாா்: உத்தரகாசி மாவட்டத்தின் சின்யாலிசெளா் பகுதியில் உள்ள சமூக சுகாதார மையம் 41 படுக்கைகளுடன் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலும் சிகிச்சைக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுரங்கப் பாதை பகுதியில் 15 மருத்துவா்கள் அடங்கிய குழுவுடன் 8 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை தயாா்படுத்தப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்கள், ஹெலிகாப்டா் ஆகியவையும் தயாராக உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com