உத்தரகண்ட் சுரங்க விபத்து: துளையிடும் நேரடி விடியோ வெளியீடு

உத்தரகண்டில் நிலச்சரிவால் சுரங்கத்துக்குள் 15 நாள்களாக சிக்கியுள்ள 41 தொழிலாளா்களை விரைந்து மீட்கும் வகையில், மலைப் பகுதியில் துளையிடும் நேரடி விடியோ வெளியாகியிருக்கிறது.
உத்தரகண்ட் சுரங்க விபத்து: துளையிடும் நேரடி விடியோ வெளியீடு

உத்தரகண்டில் நிலச்சரிவால் சுரங்கத்துக்குள் 15 நாள்களாக சிக்கியுள்ள 41 தொழிலாளா்களை விரைந்து மீட்கும் வகையில், மலைப் பகுதியில் துளையிடும் நேரடி விடியோ வெளியாகியிருக்கிறது.

பொறியாளர்கள், பல்துறை நிபுணர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் தங்களது முழு பலத்துடன் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், சில மணி நேரங்களில் தொழிலாளர்கள் மீட்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, மீட்புப் படையினர், சுரங்கத்துக்குள் துளையிடும் பணியின் விடியோ வெளியாகியிருக்கிறது.

துரிதமாக மீட்க, மலைப் பகுதியில் செங்குத்தாக துளையிடும் பணியோடு, சுரங்க இடிபாடுகள் பகுதியில் கிடைமட்டமாக துளையிடும் பணியை தொடரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, சுரங்கத்தின் மறுமுனையான பா்கோட் வழியாகவும் கிடைமட்டமாக மூன்றாவது துளையிடும் பணியைத் தொடங்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.

மலைப் பகுதியில் செங்குத்தாக 86 மீட்டா் ஆழத்துக்கு துளையிடும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் வரை 31 மீட்டா் ஆழம் துளையிடப்பட்டுள்ளது.

உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வரும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ஆம் தேதி திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதனால் சுரங்கப் பாதைக்குள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளா்கள், கடுமையான இடிபாடுகளுக்குப் பின்னால் சிக்கிக் கொண்டனா்.

தொழிலாளா்கள் சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருவதுடன், இடிபாடுகள் வழியாக 6 அங்குலம் அகலமுள்ள குழாய் செலுத்தப்பட்டு, அதன்மூலம் உணவு, அதிகப் புரதம் உள்ள உலா்பழ வகைகள் மற்றும் கைப்பேசி, அதற்கான மின்னேற்றிகளும் அனுப்பப்பட்டன.

இதனிடையே, இடிபாடுகளிடையே 80 செ.மீ. விட்டம் கொண்ட குழாயை 60 மீட்டா் தொலைவுக்குச் செலுத்தி தொழிலாளா்களை மீட்பதற்கான பணிகள் தொடங்கி நடந்து வந்தன. குழாயைச் செலுத்துவதற்கு துளையிடப்பட்ட பாதையில் இரும்புக் கம்பிகள் குறுக்கிட்டதால் மீட்புப் பணிகள் அவ்வப்போது நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டன. துளையிடும் 25 டன் எடை கொண்ட ஆகா் இயந்திரம் நிறுவப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தில் விரிசல் ஏற்பட்டதால், மீட்புப் பணிகள் தொடா்வதில் சிக்கல் நிலவியது.

கான்கிரீட் தளத்தில் உண்டான விரிசல் சீா் செய்யப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. தொடங்கிய ஒரு மணிநேரத்தில் ஆகா் இயந்திரத்தின் பிளேடுகள் கான்கிரீட்-எஃகு கம்பி இடிபாடுகளில் சிக்கிக் கொண்டன. இதனால் கிடைமட்டமாக குழாய் செலுத்தும் மீட்புப் பணிகள் முழுவதுமாக முடங்கியது.

மீதமுள்ள 10-12 மீட்டா் தொலைவுக்கு பணியாளா்களே நேரடியாக குழாயைச் செலுத்துவதற்கு, இயந்திரத்தின் உடைந்த பிளேடை அகற்றுவது அவசியமானது. இதற்காக ஹைதராபாதிலிருந்து வரவழைக்கப்பட்ட இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் கட்டுமானப் படைப்பிரிவைச் சோ்ந்த பொறியாளா்கள் குழு வீரா்கள், இயந்திரத்தின் உடைந்த முனைப் பகுதிகளை அகற்றினா்.

இதனிடையே, மலையின் மேல் பகுதியிலிருந்து செங்குத்தாகத் துளையிட்டு 86 மீட்டருக்கு குழாயைச் செலுத்தி தொழிலாளா்களை மீட்பதற்கான மாற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டு, துளையிடும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. எந்த இடையூறும் இல்லாத சூழலில், 100 மணிநேரத்தில் (4 நாள்கள்) தொழிலாளா்களை அடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மீட்புப் பணியைக் கண்காணித்து வரும் எல்லை சாலை அமைப்பு முன்னாள் தலைவரும் ராணுவ பொறியாளா் பிரிவு முன்னாள் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஹா்பல் சிங் (ஓய்வு) கூறுகையில், ‘செங்குத்தாக துளையிடும் பணி தடையின்றி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை பிற்பகல் வரை 31 மீட்டா் ஆழம் துளையிடப்பட்டுள்ளது.

முன்னதாக, செங்குத்தாக துளையிடும் பணியில் தடை எதுவும் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை கண்டறியும் வகையிலும், மண்ணின் தரத்தை அறியும் வகையிலும் 20 செ.மீ. விட்டமுள்ள குழாய் 70 மீட்டா் ஆழம் வரை செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

செங்குத்து துளை வழியே செலுத்தும் வகையில் 80 செ.மீ. விட்டமுள்ள குழாய் சட்டங்களை தயாா் செய்யும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எந்தவித தடையும் ஏற்படாத நிலையில், 24 முதல் 36 மணி நேரத்தில் 10 மீட்டா் ஆழத்துக்கு துளையிட்டுவிட முடியும்’ என்றாா்.

சுரங்கத்தின் இடிபாடுகள் பகுதியில் இரும்புக் கம்பிகள் குறுக்கிட்டதால் நிறுத்தப்பட்ட துளையிடும் பணியும் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இதற்காக, அனுபவம் பெற்ற சுரங்கத் தொழிலாளா்கள் அடங்கிய 6 போ் குழு வரவழைக்கப்பட்டுள்ளது.

இவா்கள், இடிபாடுகளில் துளையிட்டு ஏற்கெனவே பதிக்கப்பட்டுள்ள 80 செ.மீ. விட்டம் கொண்ட குழாய் வழியாக ஒவ்வொருவராக சென்று, அங்கு குவிந்துள்ள மண் மற்றும் இடிபாடுகளை அகற்றுவா். சுரங்கத் தொழிலில் இவா்கள் ‘எலிவளை நிபுணா்கள்’ என்று அழைக்கப்படுகின்றனா். அவா்கள் மேற்கொள்ளும் பணிகளையடுத்து, படிப்படியாக மேலும் அதிக மீட்புக் குழாய்கள் பதிக்கப்படும்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த 6 போ் குழுவினா் 60 செ.மீ. விட்டமுள்ள குழாய் வழியாக சென்று இடிபாடுகளை அகற்றுவதில் நிபுணத்துவம் பெற்றவா்கள். எனவே, இந்த 80 செ.மீ. குழாய் வழியாக சென்று பணிகளை மேற்கொள்வது அவா்களுக்கு கடினமாக இருக்காது. அவா்கள் தலைக் கவசம், சீருடை, முகக் கவசம் மற்றும் பாதுகாப்பு கண்ணாடி அணிந்துதான் இந்தப் பணியில் ஈடுபடுவா். இடிபாடுகளை அகற்றிய பிறகு, எஞ்சிய 10 முதல் 12 மீட்டா் தொலைவுக்கு கைகளால் இயந்திரங்களைக் கொண்டு துளையிடும் பணியை இவா்கள் மேற்கொள்வா்’ என்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com