தொழிலைக் கற்றுக்கொண்டு தன் தந்தையை மீறிச் செல்லும் முயற்சியில் முகேஷ் அம்பானி சுற்றிக்கொண்டிருந்த காலத்தில் ரேமண்ட் (Raymond) ஆடை நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தவர் விஜய்பாத் சிங்கானியா. 1980-களில், முகேஷ் அம்பானியை விட பணக்காரராக இருந்தவர்.
விஜய்பாத்துக்கு தன் நிறுவனத்தை உலகம் முழுக்க வெற்றிகரமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற மிகப்பெரிய கனவு இருந்தது. அந்தக் கனவுடன் அணிந்தால் ரேமண்ட் ஆடையை அணிய வேண்டும் என சாமானியர்கள் மனதிலும் அந்த ஆடைக்கான மரியாதையைக் கொண்டு சென்றவர். மனிதர்கள் தங்கள் கனவுகளுக்குப் பின்னால் பல வலிகளைச் சந்தித்தே ஆக வேண்டும் என்கிற விதிக்கு விஜய்பாத் சிங்கானியாவும் விலக்கில்லை.
ஆனால், இவருக்கு எதிரியாக நின்றது அவரின் சொந்த மகன் கௌதம் விஜய்பாத் சிங்கானியாதான்! நம்ப முடியாத அளவிற்கு ரேமண்டை உலக முழுக்க விஜய்பாத் கொண்டு சென்றபின், கௌதம் சிங்கானியா தன் தந்தையிடமிருந்து அனைத்து சொத்துக்களையும் பறித்து விட்டதாகத் தகவல் வெளியாகி ரேமண்ட் குழும நிர்வாகிகள், ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சர்ச்சைகளைத் தொடர்ந்து, கடந்த 2016 ஆம் ஆண்டு தன் இரண்டு மகன்களுக்கும் தன் சொத்தைப் பிரித்துக்கொடுத்தார் விஜய்பாத்.
பின்னாளில், கௌதம் தன் தந்தையை சொந்த வீட்டிலிருந்து வெளியேற்றி வாடகை வீட்டில் குடி வைத்திருக்கிறார். அப்போது, ரேமண்ட் நிறுவனத்தின் மதிப்பு ரூ.11,600 கோடி!.
தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான தனிப்பட்ட மோதல் என்பதால் ரேமண்ட் குழும பங்குதாரர்கள் இப்பிரச்னைக்குள் நுழையாமல் தவிர்த்தனர். பங்குதாரர்களுக்கு பணம்தான் பிரச்னை. அது தந்தையிடமோ, மகனிடமோ யார் வைத்திருந்தால் என்ன? பத்திரமாக இருக்கிறது என விலகியிருந்தனர்.
காலம் தந்தையைத் தூக்கி அடித்ததுபோல் இப்போது மகனைப் பழிவாங்கி வருகிறது. இம்மாத துவக்கத்தில் கௌதம் விஜய்பாத் சிங்கானியா தன் மனைவி நவாஸ் மோடியைப் பிரிவதாக அறிவித்ததிலிருந்து ரேமண்ட் குழுமத்தினரிடையே பதற்றப் புயல் உருவாகியிருக்கிறது. தற்போது, விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வேளையில், நவாஸ் மோடி தன் கணவர் கௌதம் சிங்கானியா தனக்கும் தன் மகள்களுக்கும் இழப்பீடாக அவரின் சொத்திலிருந்து 75 சதவீதத்தைத் தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறார். இது, கிட்டத்தட்ட கௌதமை நடுத்தெருவுக்குக் கொண்டுவரும் செயல் என பங்குதாரர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், கௌதம் இது என் தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்னை. இதற்காக, எந்த விதத்திலும் ரேமண்ட் குழுமம் பாதிக்கப்படாது என வாக்குறுதி அளித்திருக்கிறார். எதிர்பாராத விதமாக, இந்த விவாகரத்து வழக்கில் நவாஸ் மோடிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார் விஜய்பாத் சிங்கானியா!
கௌதமுக்கு தன் தந்தையே தனக்கு எதிராக குரல் கொடுப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். சமீபத்தில், நேர்காணல் ஒன்றில் இதுகுறித்து பேசிய விஜய்பாத் சிங்கானியா, “எனக்கு அவன் (கௌதம் சிங்கானியா) ஒன்றும் அளிக்கவில்லை. அவனுக்கு என்னுடைய எல்லாவற்றையும் அளித்தேன். இந்துத் திருமணச் சட்டத்தின்படி விவாகரத்துக்குப் பின் கணவனின் 50 சதவீத சொத்துக்கள் மனைவிக்குச் சென்றுவிட வேண்டும். ஆனால், நவாஸ் மோடி 75 சதவீதத்தைக் கேட்டிருக்கிறார். கௌதமை பொறுத்தவரை எல்லாரிடமிருந்தும் எல்லாவற்றையும் வாங்கிவிட வேண்டும். எனக்குச் செய்ததுபோல். அவனிடமே எல்லாம் இருக்க வேண்டும் என நினைப்பவன், நிச்சயம் அவளுக்கு அப்பங்கைக் கொடுக்க மாட்டான்” எனக் கூறி மீண்டும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறார்.
சாதாரணமாக துவங்கப்பட்ட ஒரு பின்னலாடை நிறுவனத்தை ஆடம்பர மக்களின் விருப்ப ஆடையாக மாற்றியது வரை கடுமையாக உழைத்த விஜய்பாத் சிங்கானியா தற்போது, 85 வயதில் தன் குடும்பத்தினரிடமிருந்து விலகி தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்தத் தலைமுறை தொழில்முனைவோர்களுக்கும் அவரின் ஆரம்ப தொழில் வாழ்க்கை நம்பிக்கையை அளிக்கிறது.
சொந்த மகன்கள் தன்னை நம்பாமல் இருந்தது, அதனால் ஏற்பட்ட வீழ்ச்சிகள் என வாழ்வில் ஏற்பட்ட சரிவுகளால்தான் என்னவோ தன் சுயசரிதையை, 'ஆன் இன்கம்பிளிட் லைஃப் (an incomplete life)' என்கிற பெயரில் எழுதியிருக்கிறார். இன்றும் உலகளவில் 200 நகரங்களில் செயல்படும் ரேமண்ட் விற்பனையகங்களின் வெற்றிக்கு விஜய்பாத்தே முன்னோடி. ஆனால், வாரிசுகளால் தனியாக விடப்பட்டிருக்கும் கொடுமையை ஓர் வெறுமையுடனே பதிவு செய்கிறார்.
ரேமண்ட் நிறுவனத்தைப் பற்றி அறிந்துகொள்ள அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் சென்றால் முதலில் எதிர்படும் வார்த்தை, நம்பிக்கை! வாழ்க்கையை ஒரு ஏமாற்றப் புன்னகையுடன்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.