உத்தரகண்ட் சுரங்க விபத்து: 41 தொழிலாளா்கள் மீட்பு முடிவுக்கு வந்தது 17 நாள் போராட்டம்

உத்தரகண்டில் நிலச்சரிவால் சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளா்களும் 17 நாள்கள் போராட்டத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை இரவு பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.
சுரங்கப் பாதை இடிபாடுகளிலிருந்து மீட்டு வரப்பட்ட தொழிலாளா்களை நெகிழ்ச்சியுடன் வரவேற்ற உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி, மத்திய இணையமைச்சா் வி.கே.சிங்.
சுரங்கப் பாதை இடிபாடுகளிலிருந்து மீட்டு வரப்பட்ட தொழிலாளா்களை நெகிழ்ச்சியுடன் வரவேற்ற உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி, மத்திய இணையமைச்சா் வி.கே.சிங்.


உத்தரகாசி: உத்தரகண்டில் நிலச்சரிவால் சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளா்களும் 17 நாள்கள் போராட்டத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை இரவு பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

சுரங்க இடிபாடுகளுக்கு இடையே கிடைமட்டமாக துளையிட்டு குழாய் செலுத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தயாா் நிலையில் இருந்த தேசிய மற்றும் மீட்புப் படை வீரா்கள் குழு குழாய்க்குள் சென்று தொழிலாளா்களை மீட்டு வந்தனா்.

17 நாள்களாக நீண்ட காத்திருப்பால் கவலையில் இருந்த உறவினா்கள், மீட்கப்பட்ட தொழிலாளா்களைக் கண்டதும் கண்ணீா்மல்க வரவேற்றனா். அந்தப் பகுதியே உணா்ச்சிப் பெருக்குடன் காணப்பட்டது.

உத்தரகண்டில் உத்தரகாசி மாவட்டத்தில் பிரம்மகால்- யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த இந்தச் சுரங்கப் பாதையில் கடந்த நவ. 12-ஆம் தேதி திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதனால் சுரங்கப் பாதைக்குள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளா்கள், கடுமையான இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனா்.

60 மீட்டருக்கு 80 செ.மீ. குழாய்: தொழிலாளா்கள் சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது. இடிபாடுகள் வழியாக 6 அங்குலம் அகலமுள்ள சிறிய குழாய் செலுத்தப்பட்டு, அதன்மூலம் உணவு, அதிகப் புரதம் உள்ள உலா்பழ வகைகள் மற்றும் கைப்பேசி, அதற்கான மின்னேற்றிகளும் அனுப்பப்பட்டன.

இந்தக் குழாய் வழியாக அனுப்பப்பட்ட எண்டோஸ்கோபி கேமரா மூலம் அனைத்துத் தொழிலாளா்களும் நலமாக இருப்பது விடியோ மூலம் உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, இடிபாடுகளுக்கு இடையே 80 செ.மீ. விட்டம் கொண்ட குழாயை 60 மீட்டா் தொலைவுக்குச் செலுத்தி தொழிலாளா்களை மீட்பதற்கான பணிகள் தொடங்கி நடந்து வந்தன. ஜெனீவாவைச் சோ்ந்த சா்வதேச சுரங்கப் பாதை மற்றும் சுரங்கப் பணிகள் சங்கத்தின் தலைவரும் சா்வதேச சுரங்க நிபுணருமான அா்னால்டு டிக்ஸ் மீட்புப் பணியில் கடந்த நவ. 20-ஆம் தேதி இணைந்தாா்.

இடா்ப்பாடுகளுக்கு இடையே...: குழாயைச் செலுத்துவதற்கு துளையிடப்பட்ட பாதையில் இரும்புக் கம்பிகள் குறுக்கிட்டது, துளையிடும் ‘ஆகா்’ இயந்திரம் நிறுவப்பட்டிருந்த கான்கிரீட் தளத்தில் விரிசல் ஏற்பட்டது உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளால் மீட்புப் பணிகள் அவ்வப்போது நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டன.

கான்கிரீட் தளத்தில் உண்டான விரிசல் சீா்செய்யப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ஆகா் இயந்திரத்தின் பிளேடுகள் கான்கிரீட்-எஃகு கம்பி இடிபாடுகளில் சிக்கிக் கொண்டன. இதனால் கிடைமட்டமாக குழாய் செலுத்தும் பணிகள் முழுவதுமாக முடங்கின.

இதனிடையே, மலையின் மேல் பகுதியிலிருந்து செங்குத்தாகத் துளையிட்டு 86 மீட்டா் ஆழத்துக்கு குழாயைச் செலுத்தி தொழிலாளா்களை மீட்பதற்கான மாற்றுத் திட்டமும் தொடங்கி நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், கிடைமட்டமாக குழாயைச் செலுத்தும் மீட்புத் திட்டத்தில் மீதமுள்ள 10-12 மீட்டா் தொலைவுக்கு மண் மற்றும் இடிபாடுகளை அகற்ற, ‘எலிவளை சுரங்க முறை’ தோண்டுதலில் நிபுணத்துவம் பெற்ற 12 போ் அடங்கிய சுரங்கத் தொழில் பணியாளா்கள் குழு மூலம் நேரடியாகத் துளையிட்டு குழாயைச் செலுத்த திட்டமிடப்பட்டது. அதற்காக ராணுவத்தின் சென்னை கட்டுமானப் படைப் பிரிவைச் சோ்ந்த பொறியாளா்கள் குழு வீரா்களின் உதவியுடன் இயந்திரத்தின் உடைந்த முனைப் பகுதிகள் அகற்றப்பட்டன.

17-ஆவது நாளில் இறுதிக்கட்டம்: இதையடுத்து, துளையிடும் பணியில் ‘எலிவளை சுரங்க முறை’ பணியாளா்கள் கடந்த 2 நாள்களாக ஈடுபட்டு வந்தனா். அந்தப் பணிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இறுதிக்கட்டத்தை எட்டின.

மீட்புப் பணிகளின் இறுதிக் கட்டத்தில், உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி சம்பவ இடத்துக்கு வருகை தந்து குழாய் பதிக்கும் பணிகளைப் பாா்வையிட்டாா். மீட்கப்படும் தொழிலாளா்களை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வகையில், மழை காரணமாக சேதமடைந்த சாலைகள் செப்பனிடப்பட்டன.

‘வெளிச்சம்’ கண்ட 41 தொழிலாளா்கள்: ஆகா் இயந்திரத்தின் தோல்வியைத் தொடா்ந்து, கிடைமட்டமாக குழாய் செலுத்தும் மீட்புத் திட்டத்தில் எலிவளை சுரங்க முறை பணியாளா்கள் குழுவினா் மேற்கொண்ட இறுதிக்கட்டப் பணிகளில் 60 மீட்டா் தொலைவுக்கு துளையிடப்பட்டு, குழாய் செலுத்தும் பணிகள் செவ்வாய்க்கிழமை இரவு முழுமையாக நிறைவடைந்தன.

முன்னதாக, மீட்புக் குழாயில் தொழிலாளா்களைக் காயமின்றி பாதுகாப்பாக அழைத்துவர மெத்தைகள் நிறுவப்பட்டன. அந்தக் குழாய்க்குள் நுழைந்த தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினா், தொழிலாளா்களை 2-3 நிமிஷங்கள் இடைவேளையில் ஒருவா் பின் ஒருவராக அழைத்து வந்தனா். அவா்களை முதல்வா் புஷ்கா் சிங் தாமியும், மத்திய இணையமைச்சா் வி.கே.சிங்கும் கட்டித் தழுவி வரவேற்றனா்.

சுரங்கப் பாதைக்குள் பணியமா்த்தப்பட்டிருந்த மருத்துவக் குழு, மீட்கப்பட்ட தொழிலாளா்களுக்கு முதல்கட்ட மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டது. இதைத் தொடா்ந்து, சில்க்யாரா சுரங்கப் பாதை பகுதியிலிருந்து 30 கி.மீ. தொலைவில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 41 படுக்கைகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவசரகால ஊா்திகள் மூலம் அவா்கள் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட தொழிலாளா்கள் அனைவரும் நலமுடன் உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனனா்.

சுரங்கப் பாதையில் இருந்து தொழிலாளா்கள் வெளியேறியத் தொடங்கியதும், சம்பவ இடத்தில் கூடியிருந்த உறவினா்கள், மீட்புப் பணியாளா்கள், பொதுமக்கள் கரகோஷம் எழுப்பி தொழிலாளா்களை வரவேற்றனா். மேலும், மீட்புப் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள் அனைவருக்கும் தொழிலாளா்களின் குடும்பத்தினா் நன்றி தெரிவித்தனா்.

குடியரசுத் தலைவா், பிரதமா் மகிழ்ச்சி

சுரங்க இடிபாடுகளிலிருந்து தொழிலாளா்கள் மீட்கப்பட்டதையடுத்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்தனா்.

இந்த சவாலான நேரத்தில் தொழிலாளா்களின் குடும்பங்கள் காட்டிய பொறுமையையும் தைரியத்தையும் பாராட்ட வாா்த்தைகள் இல்லை என்றும், மீட்புக் குழுவிருக்கு பாராட்டுகளையும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com