

நாட்டில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு நீதி கிடைக்க சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா வலியுறுத்தியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மாண்ட்லா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரியங்கா உரையாற்றினார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
பிகாரில் சமீபத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மாநிலத்தில் 84 சதவீத மக்கள் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், மாநிலத்தில் சரியான எண்ணிக்கையை அறியவும் அவர்களுக்கு நீதி கிடைக்கவும் நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை அவசியம் நடத்தப்பட வேண்டும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அறிவித்த பிரியங்கா, தனது கட்சி ம.பி.யில் ஆட்சிக்கு வந்தால் ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவசக் கல்வி மட்டுமின்றி, 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு மாதம் ரூ.500-ம், 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1000-ம் மற்றும் 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1,500-ம் உதவித்தொகையும் வழங்கப்படும்.
மாநிலத்தில் 18 ஆண்டுக்கால ஆட்சியில் பாஜக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தேர்தல் நடைபெறும் சமயத்தில் மட்டும் பல்வேறு திட்டங்களை அள்ளிவிடுகின்றது. ஆனால், கிட்டத்தட்ட 225 மாதங்களாக பாஜக ஆட்சிசெய்து வரும் மாநிலத்தில் மதிய உணவு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட 250 ஊழல்கள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர், பெண்களுக்கு ரூ.1,500 மாத உதவித்தொகை, கடன் தள்ளுபடி, 100 யூனிட் இலவச மின்சாரம், 200 யூனிட்டுக்கு பாதி விலையும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும், சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல வாக்குறுதிகள் ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் என அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
மேலும், பாஜக ஆட்சியில் சுமார் ஒன்றரை லட்சம் பெண்கள் மற்றும் இளம் பெண்கள் காணாமல் சென்றுள்ளனர். தினமும் 17 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகின்றன.
பழங்குடியினர் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளை பொறுத்தவரை நாட்டிலேயே முன்னணி மாநிலமாக மத்தியப் பிரதேசம் உள்ளது. இங்கு நிலைமை நாளுக்குநாள் மோசமாகி வருகிறது. காங்கிரஸின் பாரம்பரியத்தைப் பாருங்கள் என்றும் அவர் பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.