நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நடுநிலையாக செயல்படுமாறு மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோருக்கு 'இந்தியா' கூட்டணி கடிதம் எழுதியுள்ளது.
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், யுட்யூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் ஆதரவாக செயல்படுவதாக வாஷிங்டன் செய்தித்தாள் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் இணைந்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அனுப்பியுள்ள இந்த கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்க | 'குழந்தைத் திருமணங்கள் முடிவுக்கு வர இன்னும் 300 ஆண்டுகள் ஆகும்'
மார்க் ஜூக்கர்பெர்க்குக்கு எழுதிய கடிதத்தில், வாஷிங்டன் போஸ்ட்டின் முழுமையான விசாரணைகளை மேற்கோள் காட்டி, மெட்டா நிறுவனம் சமூக ஒற்றுமைக்கு பங்கம் விளைவிப்பதாகவும் மதவெறியைத் தூண்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுபோல, கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சைக்கு எழுதியுள்ள கடிதத்திலும், இந்தியாவில் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பதாகவும் வகுப்புவாத வெறுப்பைத் தூண்டுவதாகவும் குறிப்பாக ஆல்பபெட் குறிப்பாக யூடியூப் மீது குற்றம் சாட்டப்படுவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும், 'ஆளும் பாஜகவின் வகுப்புவாத வெறுப்புப் பிரச்சாரத்திற்கு வாட்ஸ்ஆப், ஃஃபேஸ்புக்கின் உதவுவதாகக் கூறிய வாஷிங்டன் போஸ்ட் குறித்த செய்தி அறிந்திருக்கலாம். குறிப்பாக, பாஜக உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வாட்ஸ்ஆப் குழுக்களைப் பயன்படுத்தி இந்த கீழ்த்தரமான, வகுப்புவாத பிரசாரம் செய்வது இதன் மூலமாகத் தெளிவாகத் தெரிகிறது. அதுபோல ஃபேஸ்புக்கிலும் இதுபோன்றே நடக்கிறது.
இது எங்களுக்கு நீண்ட காலமாக தெரியும், தொடர்ந்து இதற்கு எதிராக குரல் எழுப்பி வருகிறோம். இது எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்குகிறது, ஆளும் கட்சியினரை ஊக்குவிக்கிறது' என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
எனவே, குறிப்பாக வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்கள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும், சமூக பதற்றத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மோனா லிசாவின் மற்றொரு ரகசியம்!