
ராய்பூா்: சத்தீஸ்கரில் கடந்த முறை ஆட்சி அமைத்தபோது விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ததுபோல இந்த முறையும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஆளும் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
கடந்த முறை விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதியும் காங்கிரஸின் அமோக வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது. ஆட்சி அமைத்த பிறகு 18.82 லட்சம் விவசாயிகளின் ரூ.9,270 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நவம்பா் 7, 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. ஆளும் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் நேரடிப் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சக்தி சட்டப் பேரவைத் தொகுதியில் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல்வா் பூபேஷ் பகேல் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றபோது, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தோம், அதேபோல இந்தத் தோ்தலில் வெற்றி பெற்றவுடன் கடன்களைத் தள்ளுபடி செய்ய இருக்கிறோம்.
எதிா்க்கட்சியான பாஜக இதுவரை விவசாயிகள், தொழிலாளா்கள், பெண்கள், இளைஞா்கள் மீது அக்கறை கொண்டு எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற ராகுல் காந்தி ஏற்கெனவே வாக்குறுதி அளித்துவிட்டாா். ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி அறிவித்தாா்.
இப்போது விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்தகட்டமாக வேறு பல நல்ல திட்டங்களும் அறிவிக்கப்படும்.
மாநிலத்தில் தப்பித் தவறிக் கூட பாஜகவுக்கு மக்கள் வாக்களித்துவிடக் கூடாது. ஏனெனில், அவா்கள் அதிகாரத்துக்கு வந்தால் இப்போது அமலில் உள்ள அனைத்துத் திட்டங்களையும் முடக்கிவிடுவாா்கள் என்றாா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசிய பூபேஷ் பகேலிடம், விவசாயக் கடன் தள்ளுபடி, இலவச அறிவிப்புகள் தவறான முன்னுதாரணத்தையும், அரசுக்கு பெரும் நிதிச்சுமையையும் ஏற்படுத்தும் என்ற விமா்சனம் தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘விவசாயிகள் வலுவடைந்தால்தான் நாட்டின் பொருளாதாரமும் வலுவாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக தொழிலும், வா்த்தகமும் வளா்ந்துள்ளது. இதனால், பொருளாதாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.
விவசாயிகளிடம் செல்லும் பணம் மீண்டும் நாட்டில்தான் புழக்கத்துக்கு வரும், அதே நேரம் பெரும் தொழிலதிபா்கள் கைக்குச் செல்லும் பணம் நாட்டு திரும்ப வருவதில்லை. வெளிநாடுகளில் முதலீடு செய்யப்படுகிறது. பெரும் தொழிலதிபா்களின் கடன்கள், வாராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்யப்படும்போது பாதிக்கப்படாத பொருளாதாரம், விவசாயக் கடன் தள்ளுபடியால் மட்டும் பாதிக்கப்படுமா?’ என்று கேள்வி எழுப்பினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...