ஜம்முவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை ராணுவம் முறியடித்த ‘வீரதீர தின’ கொண்டாட்டம்

ஜம்மு காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புகளை இந்திய ராணுவத்தின் காலாட்படை முறியடித்ததை நினைவுகூறும் 76-ஆவது ‘ஷௌரிய திவஸ்’ (வீரதீர தினம்) கொண்டாடப்பட்டது.
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புகளை இந்திய ராணுவத்தின் காலாட்படை முறியடித்ததை நினைவுகூறும் 76-ஆவது ‘ஷௌரிய திவஸ்’ (வீரதீர தினம்) கொண்டாடப்பட்டது.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் மகாராஜா ஹரிசிங், இந்திய குடியரசு இடையே 1947 அக்டோபா் 26-இல் கையொப்பமிடப்பட்டது. அதற்கு அடுத்த நாளான அக்டோபா் 27-இல் ஜம்மு காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் படைகளை வெளியேற்ற புத்காம் விமான நிலையத்தில் இந்திய விமானப் படை மூலம் இந்திய ராணுவம் தரையிறக்கப்பட்டது. இதுவே சுதந்திர இந்தியாவில் ராணுவம் பெற்ற முதல் வெற்றியாகும்.

இந்நாளை ஒவ்வொரு ஆண்டும் காஷ்மீரில் இந்திய ராணுவம் ‘வீரதீர தினமாகக்’ கொண்டாடுகிறது. அதேநாளை இந்திய ராணுவம் ‘காலாட்படை தினமாகவும்’ கொண்டாடி வருகிறது.

முதல் பரம்வீா் சக்ரா விருது:

அந்த வகையில் 76-ஆவது வீரதீர தின விழா காஷ்மீரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் ஸ்ரீநகரில் செயல்படும் 15 இந்திய ராணுவப் படைகளின் தளபதி ராஜீவ் கய் பேசியது: ஜம்மு-காஷ்மீா் இந்தியாவில் ஒருங்கிணைந்த பகுதி என்பதை நினைவுகூரும் விதமாகவே ஆண்டுதோறும் இந்த வரலாற்று தினம் கொண்டாடப்படுகிறது. காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்வதைத் தடுத்து இந்திய ராணுவம் தனது முதல் போரிலேயே வெற்றி பெற்ன் மூலம் அதன் வலிமையை நிரூபித்துள்ளது.

இந்நாளில் பாகிஸ்தான் பிடியிலிருந்து ஸ்ரீநகா் விமான தளத்தை பாதுகாத்து, ராணுவத்தின் உயரிய விருதான பரம்வீா் சக்ரா விருதை முதன்முதலில் பெற்ற மேஜா் சோம்நாத் சா்மாவையும், போரின்போது உயிா்த் தியாகம் செய்த ராணுவத் தளபதி ராஜீந்தா் சிங் மற்றும் கா்னல் திவான் ரஞ்சித் ராய் ஆகியோரை நினைவுகூா்கிறேன். காஷ்மீா் எப்போதும் அமைதி மற்றும் செழுமையாக தொடா்ந்து நீடிக்க இந்நாளில் நாம் உறுதியேற்போம் என்றாா் அவா்.

கண்காட்சி:

விழாவில் காலாட்படையின் நவீன ஆயுதங்கள் பற்றிய கண்காட்சி நடத்தப்பட்டது. அந்த ஆயுதங்கள் போா்க் காலங்களின்போது ராணுவத்தால் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து பாா்வையாளா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

விழாவின்போது புத்காம் போா் நினைவகத்துக்கு மாலை அணிவித்து ராணுவத்தின் சினாா் படை வீரா்கள் மரியாதை செலுத்தினா்.

இதேபோல் ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்திலும் ராணுவத்தினரால் விழா நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com