இளைஞர்கள் எதற்காக வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும்? - இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி பதில்

இளைஞர்கள் எதற்காக வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும்? - இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி பதில்

இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரத்திற்கு மேல் உழைத்தாக வேண்டும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார். இது சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.


பெங்களூரு: கடந்த 30 ஆண்டுகளில் பெற்ற வளர்ச்சியை போல இந்தியா மீண்டும் வளர்ச்சி பெற, உலகின் மிகக் குறைந்த உற்பத்தித்திறன் நிலைகளை உயர்த்துவதற்கு, உலக அரங்கில் நாட்டின் நிலை மேம்படுவதற்கு, இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரத்திற்கு மேல் உழைத்தாக வேண்டும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார். இது சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் இன்ஃபோசிஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸிடம் தி ரெக்கார்ட் என்ற தலைப்பிலான விவாதத்தில் நாராயண மூர்த்தி பேசுகையில், நாட்டின் வேலை கலாசாரம் அடியோடு மாற வேண்டும் என்றும் அதற்காக இளைஞர்கள் அதிகயளவிலான உழைப்பை அளிப்பதற்கு முன்வர வேண்டும். 

“எப்படியோ, நம்முடைய இளைஞர்கள் மேற்கத்திய நாடுகளில் இருந்து விரும்பத்தகாத பழக்கங்களை எடுத்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்,” என்றும், “இந்தியாவின் வேலை உற்பத்தித்திறன் உலகின் மிகக் குறைவான ஒன்றாகும். நாம் நமது பணி சார்ந்த உற்பத்தித்திறனை மேம்படுத்தாத வரையில், அரசாங்கத்தில் ஊழலைக் குறைக்காத வரையில்... அதிகார வர்க்கத்தில் முடிவெடுப்பதில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்காத வரையில், அபரிமிதமான முன்னேற்றம் அடைந்த நாடுகளுடன் நம்மால் போட்டியிட முடியாது.

"எனவே, நம்முடைய இளைஞர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்ய செய்ய வேண்டும். இதை நான் சொல்வதற்கு காரணம் 'இந்தியா எனது நாடு', நான் வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்ய விரும்புகிறேன்' என்று நமது இளைஞர்கள் கூற வேண்டும்," என்றார். வாரம் 70 மணி நேரம் வேலை என்பது ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு இணையான வேலை நேரத்தை குறிக்கும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனியர்களும் ஜப்பானியர்களும் இதைத்தான் செய்தனர். ஒவ்வொரு குடிமகனும் குறிப்பிட்ட ஆண்டுகள் வரை கூடுதல் நேரம் வேலை செய்வதை அவர்கள் உறுதி செய்தனர். 

"செயல்திறன் அங்கீகாரத்திற்கு வழிவகுக்கிறது, அங்கீகாரம் மரியாதைக்கு வழிவகுக்கிறது, மரியாதை அதிகாரத்திற்கு வழிவகுக்கிறது," என்றவர்,இளைஞர்கள் இதை உணர்ந்து அடுத்த 20 முதல் 50 ஆண்டுகளுக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். அதனால் இந்தியாவும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் முதல் அல்லது இரண்டாவது நாடாக முன்னேறும்.

2030 ஆம் ஆண்டுக்குள் உலகிலேயே மிகப்பெரிய உழைக்கும் வயதுடைய மக்கள்தொகையில் சீனா மற்றும் இந்தோனேஷியாவுக்கு அடுத்து இந்தியாவும் ஒன்றாக இருக்கும்.

ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட 'ஜி20 பொருளாதாரங்களில் நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை இயக்குதல்' என்ற தலைப்பில் மெக்கின்சி அறிக்கையின்படி. 'பொருளாதார அதிகாரமளிப்புக் கோடு' என்று அழைக்கப்படுவதன் மூலம் நாட்டின் உழைக்கும் வயதுடைய மக்கள்தொகையை உயர்த்த முடிந்தால் மட்டுமே அது நடக்கும் என்று அறிக்கை கூறுகிறது.

2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவின் மக்கள்தொகையில் 77 சதவிகித மக்கள் அந்த அளவீடுகளுக்கு கீழ் வாழ்ந்தனர். அதிகாரமளித்தல் இடைவெளியைக் குறைக்க இந்தியா 2030 ஆம் ஆண்டுக்குள் 5.4 லட்சம் கோடி அல்லது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவிகிதம் செலவிட வேண்டும் என்று மெக்கின்சி கூறினார். ஆனால், வேலை கலாசாரத்தை மாற்ற அரசு இவ்வளவுதான் செய்ய முடியும். “ஒவ்வொரு அரசாங்கமும் மக்களின் கலாசாரத்தைப் போலவே சிறந்தது. மேலும் நமது கலாசாரம் மிகவும் உறுதியான, மிகவும் ஒழுக்கமான மற்றும் மிகவும் கடின உழைப்பாளிகளாக மாற வேண்டும், ”என்று மூர்த்தி கூறினார்.

அந்த மாற்றம் இளைஞர்களிடமிருந்து வர வேண்டும், மிகவும் கடினமாக உழைக்கும் வகை நம்முடைய இளைஞர்கள் மாற வேண்டும். ஏனென்றால் நமது மக்கள்தொகையில் கணிசமான பெரும்பான்மையாக இளைஞர்கள் உள்ளனர். அவர்களால் தான் நம் நாட்டை கட்டியெழுப்ப முடியும். 

நாட்டின் தொலைதூர கிராமத்தில் வசிக்கும் ஏழை குழந்தையின் எதிர்காலம் நமது இளைஞர்களின் தோள்களில் உள்ளது. அந்த பொறுப்பை அவர்கள் உணர வேண்டும் என்று நாராயணமூர்த்தி தெரிவித்தார். 

மேலும், கடந்த 300 ஆண்டுகளில் நமது வரலாற்றில் முதன்முறையாக உலக நாடுகளின் பார்வையில் இந்தியா சில மரியாதையைப் பெற்றுள்ளது. ஆனால் இளைஞர்கள் அந்த மரியாதையை பலப்படுத்தவும், அந்த மரியாதையை பன்மடங்கு அதிகரிக்கவும் உழைக்க வேண்டும்" என்றார்.

1991-க்கு முந்தைய நாட்களைப் பற்றி பேசுகையில், அந்த நாட்கள் வணிகர்களுக்கு நரகம் என்றும், இந்தியா வணிகத்திற்கு முற்றிலும் எதிரானது என்றும் கூறினார். "அந்த நாட்களில் இந்தியா எப்பொழுதும் சமீபத்திய தொழில்நுட்பங்களை விட மூன்று படிகள் பின்தங்கி இருந்தது. மேலும் 1991 இல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஒரு சில அடிப்படை மாற்றங்களை கொண்டு வந்தது. என்னைப் பொறுத்தவரை, 1947 -இல் அரசியல் சுதந்திரம் கிடைத்தது, 1991 -இல் பொருளாதார சுதந்திரம் கிடைத்தது என தெரிவித்தார். 

நாராயணமூர்த்தியின் கூற்று சமூக ஊடகங்களில் வைரலாகி தற்போது பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com