
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா
தொழிலதிபா் தர்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து ஸ்கார்ப், லிப்ஸ்டிக் போன்றவற்றைப் பெற்றதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கூறியுள்ளார்.
அதானி குழுமத்துக்கு எதிராக மக்களவையில் கேள்வி எழுப்ப, தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே புகாா் கடிதம் எழுதியிருந்தாா்.
வழக்குரைஞா் ஜெய் அனந்த் தேஹத்ராய் என்பவா் இதனை தெரிவித்ததாகவும், மஹுவா லஞ்சம் பெற்றதற்கான ஆதாரத்தை ஜெய் ஆனந்த் தன்னிடம் வழங்கியிருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் துபே குறிப்பிட்டிருந்தாா். இது தொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியொன்றில் தர்ஷன் ஹீராநந்தானியிடம், தான் பெற்ற பரிசுகள் குறித்து மஹுவா கூறியுள்ளார்.
இதையும் படிக்க | நாட்டிலேயே மூத்தவர் யோகா குரு சிவானந்தா; தமிழ்நாட்டில் 120 வயதுக்கு மேல் 137 பேர்!
'தர்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து என்னுடைய பிறந்தநாளுக்கு ஒரு ஸ்கார்ப், பாபி பிரவுன் மேக் அப் செட், மேக் ஐ ஷேடோ, லிப்ஸ்டிக் ஆகியவற்றைப் பெற்றேன். அவர் துபாயிலிருந்து அதனை கொண்டு வந்தார். மேலும், அவரிடம் இருந்து 2 கோடி ரூபாய் பணம் பெற்றதாகக் கூறப்படுவது நகைப்புக்குரியது. நான் 2008-ல் அரசியலில் நுழைந்தபோது வங்கியாளராக இருந்து 2 கோடிக்கும் அதிகமாகவே சம்பாதித்தேன்' என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், 'தர்ஷன் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். நான் எம்.பி. ஆவதற்கு முன்பே நாங்கள் நண்பர்கள். அவர் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனர். எனக்கு அரசு பங்களா கொடுக்கப்பட்டபோது அது மிகவும் பாழடைந்திருந்தது. எனவே, தர்ஷனிட ம் கூறி ஒரு கட்டட வடிவமைப்பாளரை வரவழைத்து பங்களாவை சரிசெய்தேன். நான் மும்பைக்குச் செல்லும்போதெல்லாம் விமான நிலையத்தில் இருந்து தர்ஷனின் காரில்தான் செல்வேன்' என்றும் கூறினார்.
அதேநேரத்தில் நாடாளுமன்ற இணையதளத்தின் உள்ளீடு மற்றும் கடவுச் சொல்லை தர்ஷனிடம் பகிர்ந்ததாகவும் ஒப்புக்கொண்ட மஹுவா, 2 கோடி ரூபாய் பணம் பெற்றதாகக் கூறப்படுவதை முற்றிலும் மறுத்துள்ளார்.
தொடர்ந்து, 'தனிப்பட்ட உறவைத் தேர்ந்தெடுப்பதில் தவறு செய்துவிட்டேன். நான் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். எனது தனிப்பட்ட உறவுகளைத் தேர்ந்தெடுக்கும் ரசனை கொடூரமாக உள்ளது. விரைவில் அதை சரிசெய்வேன் என்று நம்புகிறேன்' என்றும் அவர் கூறினார்.
இதையும் படிக்க | அக்டோபா் 31-இல் ஆஜராக இயலாது: நாடாளுமன்ற குழுவுக்கு மஹுவா மொய்த்ரா எம்.பி. கடிதம்

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...