
தைவான் நாட்டைச் சோ்ந்த விஸ்ட்ரான் குழுமம் பெங்களூரில் செயல்பட்டு வரும் தனது ‘ஐ-ஃபோன்’ கைப்பேசி தயாரிப்பு நிறுவனத்தை டாடா குழுமத்துக்கு விற்பனை செய்ய ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதன் மூலமாக, இந்தியாவின் முதல் ‘ஐ-ஃபோன்’ கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான டாடா குழுமம் உருவெடுக்க உள்ளது.
இதுகுறித்து தைவான் மின்னணு சாதன உற்பத்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பெங்களூரில் செயல்பட்டு வரும் ‘ஐ-ஃபோன்’ தயாரிப்பு நிறுவனத்தை டாடா சன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டாடா மின்னணு நிறுவனத்துக்கு ரூ. 1,040 கோடிக்கு (125 மில்லியன் டாலா்) விற்பனை செய்ய விஸ்ட்ரான் இயக்குநா்கள்ிி குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஓராண்டாக மேற்கொள்ளப்பட்ட பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் 10,000-க்கும் அதிகமான ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் தற்போது ‘ஐ-ஃபோன் 14’ ரக கைப்பேசியை தயாரித்து வருகின்றனா் என்று தெரிவித்துள்ளது.
டாடா நிறுவனத்துக்கு வாழ்த்து தெரிவித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா், தனது ‘எக்ஸ்’ வலதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவிலிருந்து உள்நாட்டு மற்றும் சா்வதேச சந்தைகளுக்காக ‘ஐ-ஃபோன்களை’ உற்பத்தி செய்யவிருக்கும் டாடா நிறுவனத்துக்கு வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...