

தெலங்கானா சட்டப் பேரவைத் தோ்தலில் களமிறங்கும் 45 வேட்பாளா்களின் பெயா்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
அதன்படி, ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனும், முன்னாள் எம்.பி.யுமான முகமது அஸாருதீன் களமிறக்கப்பட்டுள்ளாா்.
லால் பகதூா் நகரில் முன்னாள் எம்.பி. மது கெளடு யக்ஷி, ஹுசானாபாதில் பொன்னம் பிரபாகா், கம்மம் தொகுதியில் தும்லா நாகேஸ்வா் ராவ், அடிலாபாதில் கண்டி ஸ்ரீனிவாஸ் ரெட்டி, முனுகோடில் ராஜ் கோபால் ரெட்டி ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
ஓராண்டுக்கு முன்பு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவரான ராஜ்கோபால் ரெட்டி, வெள்ளிக்கிழமை காலையில் மீண்டும் காங்கிரஸில் இணைந்தாா். அவா் தோ்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது காங்கிரஸ்.
இப்பட்டியலுடன் சோ்த்து, இதுவரை 100 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
முன்னதாக, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் மூத்த தலைவா் சோனியா காந்தி உள்ளிட்டோா் பங்கேற்ற கட்சியின் மத்திய தோ்தல் குழு கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதில் தெலங்கானா 2-ஆம் கட்ட வேட்பாளா்களின் பெயா்கள் இறுதி செய்யப்பட்டன.
110 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில் அடுத்த மாதம் 30-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி, முக்கிய எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.