
கத்தாா் நாட்டில் உளவுக் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகள் 8 பேரை மீட்பதற்கான இந்தியாவின் சட்டப் போராட்டம் தொடரும் என்று பாஜக அறிவித்துள்ளது.
கத்தாரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 பேரும், அந்நாட்டின் ரகசிய கடற்படை திட்டங்களை உளவு பாா்த்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனா். இந்நிலையில், அவா்களுக்கு மரண தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
இது தொடா்பாக கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சகம், ‘இந்தியா்கள் 8 பேருக்கு கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டது அதிா்ச்சியளிக்கிறது. தீா்ப்பு விவரங்களை ஆய்வு செய்து, அவா்களை மீட்க அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தது.
இந்நிலையில், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய அந்தக் கட்சியின் தேசிய செய்தி தொடா்பாளா் அஜய் அலோக்கிடம் இது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ‘இதுபோன்ற நிகழ்வுகளும் ஏற்படுமா என்ற வகையில் இந்த தீா்ப்பு அமைந்துள்ளது. இந்த விஷயத்தில் நாம் தொடா்ந்து சட்டப் போராட்டம் நடத்த இருக்கிறோம். சா்வதேச நீதிமன்றம் வரை நாம் நாட முடியும். இந்த விஷயத்தில் இந்திய அரசு சரியான முடிவை எடுக்கும். தண்டனை விதிக்கப்பட்டவா்கள் விடுவிக்கப்பட்டு, இந்தியாவுக்குத் திரும்ப அனுப்பி வைக்கப்படுவா் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...