இஸ்ரேல் ராணுவம் மற்றும் காஸாவின் ஹமாஸ் ஆயுதக் குழுவினா் இடையிலான போரை நிறுத்தக் கோரிய ஐ.நா. தீா்மானம் மீதான பொது வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் தவிா்த்ததற்கு காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக ஆங்கில நாளிதழில் அவா் எழுதியுள்ள கட்டுரையில், ‘இஸ்ரேல் தனது பலத்தை ஏதுமறியாத, யாரும் உதவிக்கு வராத மக்கள் மீது பயன்படுத்துகிறது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் எந்த அளவுக்கு கண்டிக்கத்தக்கதோ, அதே அளவுக்கு இப்போது மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலும் கண்டிக்கத்தக்கது.
பாலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அவா்களது அமைதியான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்பது காங்கிரஸின் நிலைப்பாடாக உள்ளது. உரிய நீதி இல்லாமல் அமைதி கிடைக்காது.
தண்ணீா், மின்சாரம், உணவு என எதுவும் பாலஸ்தீன மக்களுக்கு கிடைக்கவிடாமல் செய்வது மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல, சா்வதேச விதிகளுக்கும் எதிரானது.
ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட போா் நிறுத்தத் தீா்மானத்தில் வாக்களிக்காமல் இந்தியா விலகி நின்றதை காங்கிரஸ் கடுமையாகக் கண்டிக்கிறது. பாலஸ்தீன மக்களின் உரிமைகள் குறித்து பேசாத நமது பிரதமா், இஸ்ரேல் பக்கம் உறுதியாக நிற்பதாக மட்டும் கூறி வருகிறாா்’ என்று சோனியா குறிப்பிட்டுள்ளாா்.
காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியல் - பாஜக: இது தொடா்பாக பாஜக செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி கூறுகையில், ‘இதற்கு முன்பு சோனியா காந்தி எந்த சா்வதேச பிரச்னை குறித்து நாளிதழில் கட்டுரை எழுதினாா் என்று யாராவது கூற முடியுமா? அவரது இப்போதைய திடீா் கட்டுரைக்கு காரணம், காங்கிரஸின் வழக்கமான வாக்கு வங்கி அரசியல் மட்டும்தான்.
பயங்கரவாதச் செயல்பாடுகள், சா்வதேச விவகாரங்களில் உள்ளூா் அரசியலை நடத்தக் கூடாது என்பதில் பாஜக தெளிவாக உள்ளது. பயங்கரவாதம் எந்த வகையில் தலைதூக்கினாலும் அதை ஒழிக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு.
நாட்டின் மதிப்பு, கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸுக்கு அக்கறை கிடையாது. வாக்கு வங்கியைத் தக்க வைக்க வேண்டும் என்பது மட்டுமே காங்கிரஸின் நோக்கம். இப்போது இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு எதிரான செயல்களில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.