மணிப்பூரைத் தொடர்ந்து ராஜஸ்தானில் பெண் ஒருவர் அவரது குடும்பத்தினரால் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் பிரதாப்கர் மாவட்டத்தில் ஒரு பெண்ணுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் அந்த பெண் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளனர். மேலும், வியாழக்கிழமை அன்று அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக கொண்டு சென்றுள்ளனர். இவர்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இதனை ஒருவர் விடியோ எடுத்த நிலையில் அது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ள காவல்துறையினர் இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | ரஷியாவின் லூனா-25 விழுந்து நிலவில் 10 மீட்டர் பள்ளம்: நாசா தகவல்
அந்த பெண் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தது தெரிந்து கணவரின் குடும்பத்தினர் அந்த பெண்ணை கடத்தி தங்கள் கிராமத்திற்கு அழைத்து வந்து அடித்து துன்புறுத்தி பின்னர் நிர்வாணமாக்கி ஊர்வலமாக கொண்டு சென்றதாக ராஜஸ்தான் டிஜிபி உமேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் அசோக் கெலாட், 'நாகரீக சமுதாயத்தில் இதுபோன்ற குற்றவாளிகளுக்கு இடமில்லை. இந்த குற்றவாளிகள் விரைவில் சிறையில் அடைக்கப்பட்டு, விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
பாஜக தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் மாநிலத்தில் காங்கிரஸ் அரசை கடுமையாகச் சாடியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.