
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்
புதுதில்லி: இந்தியா அனைவரையும் ஒன்றிணைக்கும் நாடு என்றும், இன்று உலகிற்கு இந்தியா தேவை. “பாரதம் இல்லாமல் உலகம் இயங்காது”. யோகா மூலம் உலகை இணைத்துள்ளோம்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறினார்.
நாக்பூர் மற்றும் கௌகாத்தியில் நடைபெற்ற வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்,
“இந்துஸ்தான் ஒரு இந்து ராஷ்டிரா என்பதுதான் உண்மை. கருத்தியல் ரீதியாக, அனைத்து பாரதிய மக்களும் இந்துக்கள் மற்றும் இந்துக்கள் என்றால் அனைத்து பாரதியர்களும். இன்று பாரதத்தில் இருப்பவர்கள் அனைவரும் இந்து கலாசாரம், இந்து முன்னோர்கள் மற்றும் இந்து நிலத்துடன் தொடர்புடையவர்கள், ”ஏனெனில் 'இந்து' அனைத்து இந்தியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று அவர் கூறினார்.
சிலர் இதைப் புரிந்து கொண்டுள்ளனர், ஆனால் அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் சுயநலம் காரணமாக அதைச் செயல்படுத்தவில்லை. ‘சுதேசி’ குடும்ப விழுமியங்கள் மற்றும் ஒழுக்கத்தில் கவனம் செலுத்துவது இப்போது கூட்டுத் தேவை என்று கூறினார்.
இதேபோல், கௌகாத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மோகன் பாகவத், பழங்காலத்திலிருந்தே பாரதம் என்ற பெயர் பயன்பாட்டில் உள்ளதால், ‘இந்தியா’ என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ என்ற வார்த்தையை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இதையும் படிக்க | ஆதித்யா-எல்1 விண்ணில் பாய்வதைக் காண 10,000 பேர் முன்பதிவு!
“நமது நாட்டின் பெயர் காலம் காலமாக பாரதம் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. எந்த மொழியாக இருந்தாலும், அந்த பெயர் அப்படியே இருக்கும்” என்று கூறினார். “நமது நாடு பாரதம். நாம், ‘இந்தியா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, எல்லாத் துறைகளிலும் ‘பாரத்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். அப்போதுதான் மாற்றம் ஏற்படும். நம் நாட்டை ‘பாரதம்’ என்று அழைத்து மற்றவர்களுக்கும் விளக்க வேண்டும்,” என்றார்.
ஒருங்கிணைப்பு சக்தி பற்றி பேசிய மோகன் பாகவத், இந்தியா அனைவரையும் ஒன்றிணைக்கும் நாடு என்றும், இன்று உலகிற்கு இந்தியா தேவை என்றும் கூறினார். “பாரதம் இல்லாமல் உலகம் இயங்காது. யோகா மூலம் உலகை இணைத்துள்ளோம்” என்று பாகவத் கூறினார். இந்திய கலாசாரம், பாரம்பரியம், குடும்ப விழுமியங்கள் குறித்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...