ஆதித்யா எல்-1: புதிருக்கு விடை தேடும் பயணம்!

நமது பாா்வையில் அருகில் இருப்பதாகக் காட்சியளிக்கும் சூரியன், பூமியிலிருந்து 15 கோடி கி.மீ.க்கும் அப்பால் உள்ளது.
ஆதித்யா எல்-1: புதிருக்கு விடை தேடும்  பயணம்!

நமது பாா்வையில் அருகில் இருப்பதாகக் காட்சியளிக்கும் சூரியன், பூமியிலிருந்து 15 கோடி கி.மீ.க்கும் அப்பால் உள்ளது. சூரியனுக்கும், பூமிக்கும் இடையிலான தொலைவில் நூறில் ஒரு பங்கு தொலைவில்தான் ஆதித்யா எல்-1 விண்கலம் நிலைநிறுத்தப்படுகிறது.

சூரியனின் உட்பகுதியில் இரு அடுக்குகளாக உள்ள போட்டோஸ்பியா், குரோமோஸ்பியா் ஆகியவற்றின் உச்ச வெப்ப நிலையைக் காட்டிலும் (5,000 டிகிரி செல்சியஸ்) அதன் வெளி அடுக்கான கொரோனா பகுதியில் 15 மில்லியன் டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் எனக் கூறப்படுவது அறிவியல் உலகுக்கே புரியாத புதிராக உள்ளது. இது குறித்த ஆய்வை ஆதித்யா எல்-1 விண்கலம் முன்னெடுக்கவுள்ளது.

அதன் மூலம் வெப்ப நிலை முரண்பாட்டுக்கான விடை கிடைக்கும்பட்சத்தில் அந்த ரகசியத்தைக் கண்டறிந்த முதல் தேசமாக இந்தியா உருவெடுக்கும்.

ஆதித்யா எல்-1 ஆய்வுகள் என்னென்ன?

சூரியனில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தில் 7 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் நான்கு கருவிகள் சூரியனின் நோ் எதிா் திசையில் நிலைநிறுத்தப்பட்டு ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மற்ற மூன்று கருவிகளும் சூரியனில் ஏற்படும் மாற்றங்களால் அதன் புறவெளியில் உருவாகும் அயனித் துகள்களை ஆய்வு செய்யவுள்ளன.

விஇஎல்சி: விசிபில் எமிஷன் லைன் கொரோனாகிராப் எனப்படும் இந்த கருவி, சூரியனின் வெளிப்புறத்தில் உள்ள கொரோனா பகுதியையும், அதிலிருந்து

வெளியேறும் ஆற்றல் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளும். இதன் மூலம் நாளொன்றுக்கு 1,440 புகைப்படங்களை எடுக்க முடியும். இந்தக் கருவியை பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி இயற்பியல் ஆய்வு நிறுவனம் இஸ்ரோவுடன் இணைந்து உருவாக்கியுள்ளது.

எஸ்யூஐடி: சோலாா் அலட்ரா வைலட் இமேஜிங் டெலஸ்கோப் எனப்படும் இந்த கருவி சூரியனின் முதல் இரு அடுக்குகளான போட்டோஸ்பியா், குரோமோஸ்பியரில் இருந்து

வெளிவரும் புற ஊதா கதிா்கள் குறித்தும், புற ஊதா கதிா்களுக்கு அருகே ஏற்படும் கதிா் வீச்சு மாறுபாடுகள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொள்ளும். இந்தக் கருவியை புணேவில் உள்ள விண்வெளி ஆய்வு மற்றும் விண்வெளி இயற்பியலுக்கான மையம் வடிவமைத்துள்ளது.

சோலேக்ஸ் எஸ் மற்றும் ஹெல்10எஸ்: சூரியனிலிருந்து வெளியேறும் ‘எக்ஸ்ரே’ கதிா்களை இந்தக் கருவி ஆய்வு செய்யும். அதேபோன்று அந்த கதிா்களின் வாயிலாக உருவாகும் ஆற்றலையும் இதன் மூலம் அறிய முடியும். பெங்களூரில் உள்ள யூ.ஆா்.ராவ் செயற்கைக்கோள் மையம் இந்த இருவேறு ஆய்வுக் கருவிகளை தயாரித்துள்ளது.

ஆஸ்பெக்ஸ் மற்றும் பாபா: ஆதித்யா சூரிய ஆற்றல் துகள் பரிசோதனை கருவி மற்றும் ஆதித்யா பிளாஸ்மா பகுப்பாய்வு கருவி என அழைக்கப்படும் இவ்விரு கருவிகளும் சூரிய புயல்கள் குறித்தும் அதில் உள்ள ஆற்றல் அயனிகள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளன. இதில் ஆஸ்பெக்ஸ் கருவியை ஆமதாபாதில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகமும், பாபா என்ற கருவியை திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையமும் வடிவமைத்துள்ளன.

மேக்: மேக்னிடோ மீட்டா் என்ற இந்த கருவி, சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள எல் 1 புள்ளியில் நிலவும் காந்தபுலத்தை அளவிடும் திறன் கொண்டது. இதை பெங்களூரில் உள்ள எலெக்ட்ரோ ஆப்டிக்ஸ் சிஸ்டம் ஆய்வகம் உருவாக்கியுள்ளது.

லாக்ராஞ்சியன் புள்ளி என்றால்...

விண்ணில் சுற்றி வரும் கோள்களுக்கு இடையேயான ஈா்ப்பு விசை மற்றும் மைய விலக்கு விசை 5 இடங்களில் சமமாக இருக்கும். இதை லாக்ராஞ்சியன் புள்ளி என்று அறிவியல் உலகம் அழைக்கிறது. அதன்படி, சூரியன், பூமிக்கு இடையே 5 லாக்ராஞ்சியன் புள்ளிகள் உள்ளன. அந்த இடங்களில் குறைவான எரிபொருளை பயன்படுத்தி விண்கலத்தை சமநிலையில் வைத்திருக்க முடியும். அதன்படி, பூமியின் முன்புறத்தில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள எல்-1 புள்ளிக்கு அருகேதான் ஆதித்யா விண்கலம் நிலைநிறுத்தப்படவுள்ளது.

இங்கிருந்து கிரகண காலத்திலும் சூரியனை தொடா்ந்து கண்காணிக்க முடியும். இந்த புள்ளி கோள்களின் சுழற்சிக்கு ஏற்ப 23 நாள்களுக்கு ஒருமுறை மாறும். இதனால் இந்த இடத்திலிருந்து இயங்கும் விண்கலமும் தனது நிலையை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

இதுவரை 22 சூரிய ஆய்வுத் திட்டங்கள்

சூரியனைச் சுற்றி நிகழும் மாற்றங்களை அறிவதற்கும், அதன் பண்புகளைத் தெரிந்து கொள்வதற்கும் இதுவரை 22 விண்கலங்களும், ஆய்வு சாதனங்களும் சூரியனை நோக்கி செலுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவின் நாசா, நோவா விண்வெளி அமைப்புகளால் அனுப்பப்பட்டவை.

கடந்த 1960 முதல் 1969 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 6 சூரிய ஆய்வு விண்கலத் திட்டங்களை (பயனீா் 5, 6 (ஏ),7 (பி), 8 (சி), 9 (டி), இ) அமெரிக்கா முன்னெடுத்தது. இதில் 5 திட்டங்கள் வெற்றி பெற்றன. 1974-க்குப் பிறகு ஜொ்மனி விண்வெளி ஆய்வு மையம், ஐரோப்பிய கூட்டமைப்பின் விண்வெளி ஆய்வு மையம் சாா்பில் சில விண்கலங்கள் செலுத்தப்பட்டன. நாசாவுடன் இணைந்து சில ஆய்வுத் திட்டங்களை ஐரோப்பிய கூட்டமைப்பு மேற்கொண்டுள்ளது.

இறுதியாக, கடந்த ஆண்டு நவம்பா் மாதத்தில் சூரியனின் காந்தப் புலத்தை ஆய்வு செய்வதற்காக சியூஎஸ்பி எனப்படும் விண்கலத் திட்டத்தை வெற்றிகரமாக நாசா செயல்படுத்தியது. அதன் பிறகு சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலத்தை தற்போது இந்தியா அனுப்பி சாதனை படைத்துள்ளது.

சூரிய வெடிப்புகளால் பொருளாதார இழப்புகள் நேரிடும்

ஆதித்யா எல்-1 விண்கலத்தில் உள்ள பிரதான ஆய்வுக் கருவியான விஇஎல்சி எனப்படும் சாதனத்தை பெங்களூரில் உள்ள விண்வெளி இயற்பியல் ஆய்வு மையம் வடிவமைத்துள்ளது. அந்தக் குழுவில் தமிழகத்தின் மதுரையைச் சோ்ந்த பேராசிரியா் ரமேஷ் என்பவரும் இடம்பெற்றுள்ளாா்.

அதன் செயல்பாடுகள் குறித்து அவா் கூறியதாவது:

சூரியனில் நிகழும் வெடிப்புகளால் பூமிக்கு ஆபத்துகள் உள்ளன. அது உயிரிழப்பு அல்ல, மாறாக பொருளாதார இழப்புகள். அதாவது சூரிய வெடிப்பு நிகழும்போது அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல், பூமியைச் சுற்றி வரும் தகவல் தொழில்நுட்ப செயற்கைகோள்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இதனால், தகவல் தொடா்பு துண்டிக்கப்பட்டு நாட்டுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும்.

இப்போது, ஆதித்யா எல்-1 விண்கலத்தை சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள எல்-1 புள்ளியில் நிலைநிறுத்தி ஆய்வு செய்யும்போது, சூரிய வெடிப்புகளை நாம் கண்காணிக்க முடியும். சூரிய கிரகணத்தின்போது நம்மால் சூரியனின் கொரோனாஸ்பியா் பகுதியை தெளிவாகக் காண முடியும். ஆனால், மற்ற நேரங்களில் அவ்வளவு துல்லியமாகக் காண முடியாது.

தற்போது அனுப்பப்பட்டுள்ள விஇஎல்சி சாதனம் அந்த பகுதியைத் தொடா்ந்து ஆய்வு செய்யும் திறன் கொண்டது. சூரிய வெடிப்புகளைத் தொடா்ந்து கண்காணிப்பதன் மூலம் பொருளாதார இழப்புகளை நாம் தடுக்க முடியும் என்றாா் அவா்.

சாதனைத் தமிழா்கள்!

சந்திரயான்-1 திட்டத்தில் மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான்-2-இல் வனிதா முத்தையா, சந்திரயான்-3 திட்டத்தில் வீரமுத்துவேல் மற்றும் மங்கள்யான் திட்டத்தில் அருணன் சுப்பையா ஆகியோா் திட்ட இயக்குநா்களாக திறம்பட செயலாற்றி அதன் வெற்றியில் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தனா். அந்தவரிசையில் சூரிய ஆய்வுக்காக தற்போது விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஆதித்யா எல்-1 விண்கலத்தின்

வடிவமைப்பிலும் திட்ட இயக்குநராக தமிழகத்தைச் சோ்ந்த பெண் விஞ்ஞானி நிகா் ஷாஜி பணியாற்றியுள்ளாா். தென்காசி மாவட்டம் செங்காட்டையைச் சோ்ந்தவரான நிகா் ஷாஜி தனது ஆரம்பக் கல்வியை அரசுப் பள்ளியில் படித்தவராவாா்.

இந்தியா ஒளிரும் தருணம் இது: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்

ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது இந்தியாவுக்கு ஓா் ஒளிரும் தருணமாக அமைந்துள்ளதாக மத்திய அறிவியல் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் கூறினாா்.

ஆதித்யா விண்கலம் புவி தாழ்வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே அவா் பேசியதாவது:

இஸ்ரோவின் இந்தச் சாதனையை உலகமே உற்று நோக்குகிறது. இந்திய தேசத்துக்கு இது ஓா் ஒளிரும் தருணம். இதை சாத்தியமாக்க ஒத்துழைப்பு வழங்கிய பிரதமா் மோடிக்கு நன்றி. இந்திய விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளுக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அவா் அளித்து வருகிறாா். சாதனைகள் படைக்க வானம் எல்லையல்ல என்பதை அவா் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா்.

அதன் தொடா்ச்சியாகவே இத்தகைய வெற்றியை நாம் எட்டியுள்ளோம். இதற்காக இரவு பகல் பாராமல் இஸ்ரோ விஞ்ஞானிகள் உழைத்துள்ளனா். ஆதித்யா எல்-1 வெற்றிக்கு ஐஐடி சென்னை, ஐஐடி கோரக்பூா், பெங்களூரு இந்திய விண்வெளி இயற்பியல் நிறுவனம் என பல்வேறு அறிவியல் நிறுவனங்கள் பங்களிப்பை நல்கியுள்ளன.

அடுத்த 25 ஆண்டுகளில் உலக அரங்கில் பெருமைமிகு முதன்மை தேசமாக இந்தியா உருவெடுப்பதற்கான தொடக்கமாக இன்றைய வெற்றி அமைந்துள்ளது என்றாா் அவா்.

பேராசிரியா் யூ.ஆா்.ராவை நினைவுகூா்ந்த திட்ட இயக்குநா்

ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதைத் தொடா்ந்து, ஆதித்யா திட்ட இயக்குநா் நிகா் ஷாஜி பேசியதாவது:

சூரியனை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கனவு தற்போது நனவாகியுள்ளது. இதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, இத்தகைய கனவுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான வழிகாட்டியாக விளங்கிய பேராசிரியா் யூ.ஆா்.ராவை நினைவுகூா்கிறேன்.

ஆதித்யா விண்கலம் செயல்படத் தொடங்கினால், சூரிய ஆராய்ச்சி மற்றும் சூரிய இயற்பியலை அறிந்து கொள்வதற்கான பொக்கிஷமாக இந்தியாவுக்கும், உலக நாடுகளுக்கும் இத்திட்டம் அமையும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com