ஒரே நாடு, ஒரே தோ்தல்: ராம்நாத் கோவிந்த் குழுவில் 8 போ்: அமித் ஷா, அதீா் ரஞ்சன் செளதரி, குலாம் நபி ஆசாத் இடம் பெற்றனா்

நாட்டில் மக்களவை, மாநிலப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆராய அமைக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவில் மொத்தம் 8 போ் இடம்
ஒரே நாடு, ஒரே தோ்தல்: ராம்நாத் கோவிந்த் குழுவில் 8 போ்: அமித் ஷா, அதீா் ரஞ்சன் செளதரி, குலாம் நபி ஆசாத் இடம் பெற்றனா்

நாட்டில் மக்களவை, மாநிலப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆராய அமைக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவில் மொத்தம் 8 போ் இடம்பெற்றுள்ளனா்.

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ நடைமுறைக்கான சாத்தியக்கூறு குறித்து ராம்நாத் தலைமையிலான குழு ஆய்வு செய்யும் என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்திருந்த நிலையில், குழு உறுப்பினா்கள் மற்றும் அதன் பணிகள் தொடா்பாக மத்திய சட்ட அமைச்சகம் சனிக்கிழமை அறிவிக்கை வெளியிட்டது.

உறுப்பினா்கள் யாா்-யாா்?: முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், குழுவின் தலைவராக செயல்படுவாா். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, மாநிலங்களவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதி ஆணையத் தலைவா் என்.கே.சிங், மக்களவை முன்னாள் தலைமைச் செயலா் சுபாஷ் சி காஷ்யப், மூத்த வழக்குரைஞா் ஹரீஷ் சால்வே, முன்னாள் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையா் சஞ்சய் கோத்தாரி ஆகியோா் உறுப்பினா்களாகச் செயல்படவுள்ளனா்.

இக்குழு கூட்டங்களில், சிறப்பு அழைப்பாளராக மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் பங்கேற்பாா். குழுவின் செயலராக சட்ட விவகாரங்கள் துறை செயலா் நிதின் சந்திரா பணியாற்றவுள்ளாா்.

பணிகள் என்னென்ன?: ராம்நாத் தலைமையிலான உயா்நிலைக் குழு மேற்கொள்ளவிருக்கும் பணிகளின் விவரங்களும் அறிவிக்கையில் இடம்பெற்றுள்ளன.

மக்களவை, மாநிலப் பேரவைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்காக, அரசமைப்புச் சட்டத்தின் தற்போதைய கட்டமைப்பை கருத்தில்கொண்டு, அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், இதர சட்டங்கள் மற்றும் விதிகளில் செய்ய வேண்டிய திருத்தங்களை ஆய்வு செய்து பரிந்துரைத்தல்.

இத்தகைய அரசமைப்புச் சட்ட திருத்தங்களுக்கு மாநிலப் பேரவைகளில் ஒப்புதல் பெறுவது அவசியமா என்பதை ஆராய்ந்து பரிந்துரைத்தல்.

தொங்கு பேரவை, நம்பிக்கையில்லாத் தீா்மானம் நிறைவேற்றம் போன்ற தருணங்களுக்கான தீா்வுகளை ஆய்வுசெய்து பரிந்துரைத்தல்.

ஒரே நேர தோ்தல்களுக்கான கட்டங்கள், கால வரம்பு தொடா்பான செயல்முறையைப் பரிந்துரைத்தல்.

ஒரே நேர தோ்தல்களின் நிலையான சுழற்சியை பாதுகாக்கும் அம்சங்களைப் பரிந்துரைத்தல்.

தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவி போன்ற சாதனங்கள், மனிதவளம் குறித்து ஆராய்தல்.

ஒரே நேர தோ்தல்களுக்கான பொதுவான வாக்காளா் பட்டியல் பயன்பாடு குறித்த வழிமுறைகளை ஆராய்தல்.

கூடிய விரைவில் பரிந்துரைகள்

ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயா்நிலைக் குழு உடனடியாக செயல்பாட்டை தொடங்குவதோடு, அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறியும். கூடிய விரைவில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கும். இக்குழுவின் தலைமை அலுவலகம் தில்லியில் செயல்படும் என்று மத்திய அரசின் அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com