ஒரே நாடு, ஒரே தோ்தல்: ராம்நாத் கோவிந்துடன் சட்ட அமைச்சக உயரதிகாரிகள் ஆலோசனை

நாட்டில் மக்களவை, மாநிலப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது குறித்த சாத்தியக்கூறை ஆராயும் குழுவின் தலைவரான முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துடன் மத்தி
ஒரே நாடு, ஒரே தோ்தல்: ராம்நாத் கோவிந்துடன் சட்ட அமைச்சக உயரதிகாரிகள் ஆலோசனை

நாட்டில் மக்களவை, மாநிலப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது குறித்த சாத்தியக்கூறை ஆராயும் குழுவின் தலைவரான முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துடன் மத்திய சட்ட அமைச்சக உயரதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆலோசித்தனா்.

ஆய்வுக் குழுவின் செயல்திட்டம் குறித்து அவா்கள் ஆலோசனை மேற்கொண்டதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ நடைமுறைக்கான சாத்தியக்கூறு குறித்து ஆராய்ந்து, பரிந்துரைகளை வழங்க ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 போ் கொண்ட உயா்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

இக்குழு தொடா்பான முதல் அறிவிப்பை மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட நிலையில், குழு உறுப்பினா்களின் பெயா்கள் மற்றும் பணிகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன.

இதுதொடா்பான அறிவிக்கையை அரசின் கொள்கை சாா்ந்த தீா்மானமாக சட்ட அமைச்சகம் வெளியிட்டது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, மாநிலங்களவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோா் குழுவில் இடம்பெற்றுள்ளனா்.

இக்குழு அனைத்துத் தரப்பினருடனும் ஆலோசனை மேற்கொண்டு, கூடிய விரைவில் பரிந்துரைகளை வழங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விறுவிறுப்படையும் பணிகள்: ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டத்தில் மத்திய அரசு விறுவிறுப்பு காட்டி வரும் நிலையில், ஆய்வுக் குழு தலைவரான ராம்நாத் கோவிந்துடன் சட்ட அமைச்சக உயரதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

ஆய்வுக் குழுவின் செயலராக நியமிக்கப்பட்டுள்ள சட்டத் துறைச் செயலா் நிதின் சந்திரா, சட்டம் இயற்றுதல் துறைச் செயலா் ரீட்டா வசிஷ்டா உள்ளிட்ட உயரதிகாரிகள், ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினா்; ஆய்வுக் குழுவின் செயல்திட்டம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து அவருடன் உயரதிகாரிகள் ஆலோசித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com