

‘விண்வெளி திட்டங்களில் அமெரிக்க, ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவனங்களுக்கு (நாசா, ரோஸ்காஸ்மோஸ்) நிகராக போட்டியிடும் வல்லமையுடன் இப்போது இஸ்ரோ திகழ்கிறது; பிரதமா் மோடியின் வளா்ச்சி சாா்ந்த கொள்கை முடிவுகளே அதற்கு காரணம்’ என்று மத்திய விண்வெளி மற்றும் அணுசக்தி துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.
இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென்பகுதியில் அண்மையில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் தென்பகுதியில் தடம் பதித்த முதல் நாடு என்ற வரலாற்றுப் பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது. இதையடுத்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல்1 என்ற விண்கலம் சனிக்கிழமை வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் மாநிலம் உதம்பூரில் ‘என் மண், என் தேசம்’ பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்த மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங், அந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:
இந்தியாவின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான அமிா்த கால வளா்ச்சி பயணத்தில், சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா-எல்1 திட்டங்கள் முன்னிலை வகிக்கின்றன.
இந்த தசாப்தத்தை ‘மோடியின் தசாப்தம்’ என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும். அவா் மேற்கொள்ளும் வளா்ச்சி சாா்ந்த கொள்கை முடிவுகளை உலக நாடுகள் பாராட்டுகின்றன.
பிரதமா் மோடியின் ஆட்சி நடைபெறுவதால் மட்டுமே இந்தியாவின் சமீபத்திய விண்வெளி அதிசயங்கள் சாத்தியமாகியுள்ளன. இந்திய விண்வெளித் துறையில் அரசு-தனியாா் பங்களிப்புக்கான புதிய வாயில்களை அவா் திறந்துள்ளாா்.
இந்தியாவின் விண்வெளித் துறைக்கு வானம் கூட எல்லை கிடையாது என்பதே உண்மை.
கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளி வளா்ச்சிப் பயணம் பெரும் பாய்ச்சலை கண்டுள்ளது. விண்வெளித் திட்டங்களில் அமெரிக்க, ரஷிய விண்வெளி நிறுவனங்களுக்கு நிகராகப் போட்டியிடும் வல்லமையுடன் இஸ்ரோ இப்போது திகழ்கிறது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.