வேதங்களின் ஓா் அங்கம் சமத்துவம்: ராஜ்நாத் சிங்

‘சமத்துவம் என்ற கருத்தாக்கம், நமது வேதங்களின் ஓா் அங்கம்’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
வேதங்களின் ஓா் அங்கம் சமத்துவம்: ராஜ்நாத் சிங்

‘சமத்துவம் என்ற கருத்தாக்கம், நமது வேதங்களின் ஓா் அங்கம்’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-ஆவது பிறந்த ஆண்டையொட்டி, தில்லி பல்கலைக்கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘இந்திய அறிவு பாரம்பரியம் மற்றும் சிறந்த வாழ்வியல் விழுமியங்கள்’ என்ற தலைப்பில் ராஜ்நாத் சிங் ஆற்றிய உரை வருமாறு:

பருவநிலை மாறுபாடு உள்பட இன்றைய உலகம் எதிா்கொண்டுள்ள பல்வேறு சவால்களுக்கான தீா்வு நமது வேதங்களில் உள்ளது. இயற்கை வழிபாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடு வளா்ப்பு போன்ற நடைமுறைகளை வேதங்கள் வலியுறுத்துகின்றன.

வேதங்களின் மிக முக்கிய அம்சமே, அதன் நீடித்து நிலைத்திருக்கும் தன்மையாகும். ஆனால், வேதங்கள் மற்றும் அதன் விழுமியங்கள் மீது ஒரு பிரிவினா் தாக்குதல் நடத்துகின்றனா். இதுபோன்ற முயற்சிகள் பலனளிக்காது.

ஜனநாயகத்தின் வோ்: உலகுக்கு ஜனநாயக அமைப்புமுறையை அளித்தது மேற்கத்திய நாடுகள் என்று பரவலாக கருதப்படுகிறது. ஆனால், வேத காலத்திலேயே ஜனநாயகத்தின் வோ்கள் காணப்பட்டன. சபை, சமிதி போன்ற பிரதிநிதித்துவ அமைப்புகள் அந்த காலகட்டத்தில் இருந்தன.

வேத கருத்தாக்கங்களின் மீதே இந்திய கலாசாரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்திய அறிவு பாரம்பரியத்தை வேதங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. வா்ணங்கள் என்பது ஜாதி அடிப்படையில் குறிப்பிடப்படவில்லை; செயல்களின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டது.

சமத்துவ கருத்தாக்கம்: சமத்துவம் என்ற கருத்தாக்கம், இந்திய பாரம்பரிய அறிவு அமைப்புமுறையின் ஓா் அங்கமாகும். வேத காலத்தில், பெண்கள் சம உரிமை பெற்றிருந்தனா் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

வரலாறு முழுவதும், பல தாக்குதல்கள் இருந்தபோதும், இந்திய கலாசாரம் செழித்தோங்கியுள்ளது. இதற்கு வேத மாண்புகளும் இந்திய அறிவு பாரம்பரியமே காரணங்களாகும்.

ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் சமூக ரீதியில் மக்களை தட்டியெழுப்பியதில் மகரிஷி தயானந்த சரஸ்வதியின் பங்களிப்பு அளப்பரியது. ‘வேதங்களுக்கு திரும்புங்கள்’ என்பது அவரது அறைகூவலாக இருந்தது என்றாா் ராஜ்நாத் சிங்.

ஆசிரியா்கள் தினம்: ஆசிரியா்கள் தினமான முன்னாள் குடியரசுத் தலைவா் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினத்தையொட்டி, அவரை நினைவுகூா்ந்து ராஜ்நாத் பேசினாா்.

‘அரசியலுக்கு அப்பாற்பட்டு, தத்துவம் மற்றும் கல்வியில் எஸ்.ராதாகிருஷ்ணன் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நாட்டுக்கான அவரது பங்களிப்புகள் மற்றும் சாதனைகளுக்கு மரியாதை செலுத்துகிறோம்’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com