ஆன்லைன் ரம்மி: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது செப்.15-இல் விசாரணை

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதித்து அரசால் பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு
Updated on
1 min read

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதித்து அரசால் பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
 ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதித்து 2020-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது.
 இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ஹெட் டிஜிட்டல் உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், "தமிழக அரசு கொண்டுவந்துள்ள தடைச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது.
 போதிய காரணங்களை விளக்காமல் இந்தச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சட்டம் ரத்து செய்யப்படுகிறது' என தீர்ப்பளித்தது. மேலும், உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டுவர அரசுக்கு எவ்விதத் தடையும் இல்லை எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்திருந்தனர்.
 இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2021, நவம்பரில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த ஆண்டு செப்டம்பரில் விசாரித்த உச்சநீதிமன்றம், எதிர் மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.
 இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ், சஞ்சய் குமார், எஸ்.வி.என். பட்டீல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
 தமிழக அரசின் தரப்பில் வழக்குரைஞர் சபரிஸ் சுப்ரமணியன் ஆஜரானார். அப்போது, வழக்கை ஒத்திவைக்கக் கோரி தமிழக அரசின் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டிருப்பதாக நீதிபதிகள் அமர்வு கூறியது. மேலும், வழக்கு விசாரணையை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குத் ஒத்திவைத்து உத்தரவிட்டது.
 எதிர்மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி வழக்கில் வாதங்களை முன்வைக்க தயாராக இருப்பதாக நீதிபதிகளிடம் கூறினார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com