நிகழ்ச்சி நிரல் வெளியிட வேண்டும்: மோடிக்கு சோனியா கடிதம்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடர்பான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
நிகழ்ச்சி நிரல் வெளியிட வேண்டும்: மோடிக்கு சோனியா கடிதம்


புது தில்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடர்பான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, புதன்கிழமை, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரல் இதுவரை வெளிப்படையாக வெளியிடப்படவில்லை. மணிப்பூர் உள்ளிட்ட நாட்டின் மிக முக்கியமான 9 விஷயங்கள் குறித்து சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

மேலும், பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி எழுதியிருக்கும் கடிதத்தில், நாடாளுமன்ற அமர்வுக்கான நிகழ்ச்சி நிரல் இல்லை. எனவே, சிறப்புக் கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். சிறப்புக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கும் செவி மடுக்க வேண்டும். நாட்டின் மிக முக்கியமான பிரச்னைகளான வேலை வாய்ப்பின்மை, பொருளாதாரம், மணிப்பூர் குறித்தும் சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும்.

மேலும்,  சீன ஆக்ரமிப்பு, அதானி குழும முறைகேடு உள்ளிட்ட 9 விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் ஆலோசித்து இந்த சிறப்புக் கூட்டத் தொடர் நடத்தப்படவில்லை என்பதும், நாடாளுமனற் சிறப்புக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரல் குறித்து எந்தக் கட்சிக்கும் தெரிவிக்கவில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரை செப்டம்பா் 18 முதல் 22 -ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு அரசு கூட்டியுள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இது நாட்டின் விடுதலையின் அமுதகாலக் கட்ட இலக்கிற்கான கூட்டத்தொடா் எனவும் கூறப்படுகிறது.

நிகழ் 17-ஆவது மக்களவையின் 13 -ஆவது கூட்டத் தொடராகவும், மாநிலங்களவையின் 261- ஆவது கூட்டத் தொடராகவும் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி, விடுதலையின் அமுதப் பெருவிழா காலக் கட்டத்தில் நாடாளுமன்றத்தில் பயனுள்ள கலந்துரையாடல்களும், விவாதங்களும் நடைபெற காத்திருப்பதாகவும் எக்ஸ் (ட்விட்டா்) பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சிறப்புக் கூட்டத்தொடா் செப்டம்பா் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் நிகழ்ச்சி நிரல் பற்றி நாடாளுமன்ற அமைச்சகமும், நாடாளுமன்ற இரு அவைகளின் செயலகங்களும் வெளியிடாத நிலையில் பல்வேறு ஊகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com