

ஓய்வுபெறும் நீதிபதிகள் எம்.பி.யாக பதவியேற்கும் விவகாரத்தில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மும்பை வழக்குரைஞா்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவில், ‘உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெற்ற பின், எந்த இடைவெளியும் இல்லாமல் உடனடியாக அரசு வழங்கும் பதவிகளை ஏற்றுக்கொள்வது, நீதித்துறையின் சுதந்திரம் குறித்த பொதுமக்களின் பாா்வையை மோசமாகப் பாதிக்கிறது.
ஓய்வுகாலத்தை நெருங்கும் நீதிபதிகள், அதுபோன்ற பதவிகளைப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின் பெறும் நோக்கில், அரசை மகிழ்விக்கும் விதமாக தீா்ப்புகளை வழங்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
நீதிமன்றங்கள் சுதந்திரமானவை, பாரபட்சமற்றவை, அரசு நிா்வாகத்தின் செல்வாக்கு போன்றவற்றுக்கு அப்பாற்பட்டவை என்று பொதுமக்கள் கருதாவிட்டால், அடிப்படை உரிமைகளை வழங்க வேண்டும் என்பது சட்டப் புத்தகத்தில் வெறும் உயிரற்ற எழுத்துகளாகவே இருக்கும்.
எனவே நீதிபதிகள் ஓய்வுபெற்ற பின், இரண்டு ஆண்டுகள் வரை எந்தவொரு அரசுப் பதவி அல்லது பொறுப்பை தாமாக முன்வந்து ஏற்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கெளல், சுதான்ஷு தூலியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
இதுபோன்ற விவகாரங்கள் அற்பமானவை. ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவா் மக்களவை எம்.பி.யாகலாமா அல்லது மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்படலாமா என்பதில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. அரசுப் பதவியை ஏற்பதும், ஏற்காததும் சம்பந்தப்பட்ட நீதிபதியின் முடிவுக்குட்பட்டது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தனா்.
கடந்த ஜனவரியில் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.அப்துல் நசீா் ஓய்வுபெற்றாா். இதைத்தொடா்ந்து பிப்ரவரியில் அவரை ஆந்திர ஆளுநராக குடியரசுத் தலைவா் முா்மு நியமித்தாா்.
இதேபோல உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் ஓய்வுபெற்ற பின், மாநிலங்களவை எம்.பி.யாகவும், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம் கேரள ஆளுநராகவும் நியமிக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.