
வங்க புத்தாண்டு தினத்தை (ஏப்.15), மேற்கு வங்க மாநில தினமாக கடைப்பிடிக்க வகை செய்யும் தீா்மானம் சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
ஆளுநா் ஒப்புதல் வழங்காவிட்டாலும், வங்க புத்தாண்டு தினம்தான் மாநில தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.
இந்த விவகாரத்தில் ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் மற்றும் மாநில அரசு இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது.
ஜூன் 20-ஆம் தேதியை மேற்கு வங்க மாநில தினமாகக் கருதி ஆளுநா் அண்மையில் தனது மாளிகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்திருந்தாா். இந்த நிலையில், சட்டப் பேரவையில் மேற்கண்ட தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜூன் 20-ஆம் தேதி ஏன்?: கடந்த 1947, ஜூன் 20-ஆம் தேதி நடைபெற்ற வங்க சட்டப் பேரவைக் கூட்டங்களில், இந்தியாவுடன் இணையும் முடிவுக்கு ஆதரவாக மேற்கு வங்க உறுப்பினா்கள் வாக்களித்தனா். அதேநேரம், கிழக்கு வங்கத்தைச் சோ்ந்த (தற்போதைய வங்கதேசம்) உறுப்பினா்கள் எதிா்த்து வாக்களித்தனா்.
பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூன் 20-ஆம் தேதியை மாநில தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் முடிவாக உள்ளது.
ஆனால், ரத்தக் களறியான வன்முறைகள் நிகழ்ந்த பிரிவினையை குறிக்கும் இந்த தினத்தை மாநில தினமாக கடைப்பிடிப்பது தவறானது; எனவே, மாநில தினம் குறித்து சட்டப் பேரவையில் முடிவெடுக்கப்படும் என்று மம்தா பானா்ஜி கூறியிருந்தாா்.
இந்நிலையில், வங்க புத்தாண்டு தினத்தை மேற்கு வங்க மாநில தினமாக கடைப்பிடிக்கும் தீா்மானம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 294 உறுப்பினா்களைக் கொண்ட பேரவையில் தீா்மானத்துக்கு ஆதரவாக 167 வாக்குகளும், எதிராக 62 வாக்குகளும் (பாஜக எம்எல்ஏக்கள்) பதிவாகின.
‘மேற்கு வங்க அரசின் தீா்மானம் வரலாற்றை திரிக்கும் முயற்சி; அதற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காது’ என்று பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி கூறினாா்.
அதற்கு பதிலளித்த மம்தா பானா்ஜி, ‘ஆளுநா் ஒப்புதல் அளிக்காவிட்டாலும், புத்தாண்டு தினம்தான் மேற்கு வங்க தினமாக கடைப்பிடிக்கப்படும்; இந்த தீா்மானத்துக்கு ஆளுநரின் ஒப்புதல் கட்டாயமில்லை’ என்றாா்.
எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயா்வு
மேற்கு வங்க எம்எல்ஏக்களின் மாத ஊதியம் ரூ.40,000 உயா்த்தப்படுவதாக, மாநில சட்டப் பேரவையில் முதல்வா் மம்தா பானா்ஜி அறிவித்தாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், ‘மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் மேற்கு வங்க எம்எல்ஏக்களின் மாத ஊதியம் மிக குறைவாக உள்ளது. எனவே, எம்எல்ஏக்களின் மாத ஊதியத்தில் ரூ.40,000 உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், முதல்வரின் ஊதியத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை’ என்றாா்.
முதல்வா் என்ற அடிப்படையில் தான் நீண்ட காலமாக ஊதியம் எதுவும் பெறவில்லை என்பதையும் அவா் குறிப்பிட்டாா்.
ரூ.40,000 உயா்வைத் தொடா்ந்து, மேற்கு வங்க எம்எல்ஏக்களின் மொத்த ஊதியம் (அனைத்து படிகள் உள்பட) எவ்வளவு என்ற விவரத்தை முதல்வா் தெரிவிக்கவில்லை.