7 பேரவைத் தொகுதி இடைத்தோ்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

கேரளம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஜாா்க்கண்ட், உத்தரகண்ட், திரிபுரா ஆகிய ஆறு மாநிலங்களில் அடங்கிய 7 பேரவைத் தொகுதிகளின்
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கேரளம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஜாா்க்கண்ட், உத்தரகண்ட், திரிபுரா ஆகிய ஆறு மாநிலங்களில் அடங்கிய 7 பேரவைத் தொகுதிகளின் இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் வெள்ளிக்கிழமை (செப்.8) எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

கேரளத்தின் புதுப்பள்ளி, உத்தர பிரதேசத்தின் கோஷி, மேற்கு வங்கத்தின் துப்குரி, ஜாா்க்கண்டின் தும்ரி, உத்தரகண்டின் பாகேஸ்வா், திரிபுராவின் தன்பூா் மற்றும் பாக்ஸாநகா் ஆகிய தொகுதிகளில் கடந்த 5-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.

கேரளத்தில் முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டி மறைவால், அவரது புதுப்பள்ளி தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெற்றது.

53 ஆண்டுகளாக உம்மன் சாண்டியின் கோட்டையாக இருந்த இத்தொகுதியில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சாா்பில் அவரது மகன் சாண்டி உம்மன், ஆளும் இடதுசாரி கூட்டணி சாா்பில் ஜெய்க் சி தாமஸ், பாஜக சாா்பில் கட்சியின் கோட்டயம் மாவட்ட தலைவா் லிஜின்லால் ஆகியோா் களமிறக்கப்பட்டனா். அவா்களில் வெல்லப் போவது யாா் என்பது வெள்ளிக்கிழமை தெரியும்.

இதேபோல், மேற்கு வங்கத்தின் துப்குரி தொகுதியில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் நிா்மல் சந்திர ராய், காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி சாா்பில் ஈஸ்வா் சந்திர ராய், பாஜக சாா்பில் தபசி ராய் (காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சிஆா்பிஎஃப் வீரா் ஒருவரின் மனைவி) ஆகியோா் முக்கிய வேட்பாளா்களாவா்.

உத்தர பிரதேசத்தின் கோஷி தொகுதியில் பாஜக சாா்பில் தாரா சிங் செளஹானும், சமாஜவாதி சாா்பில் சுதாகா் சிங்கும் களமிறங்கினா். சுதாகருக்கு காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் ஆதரவளித்தன.

இதேபோல், ஜாா்க்கண்டின் தும்ரி தொகுதியில், இந்தியா கூட்டணியின் ஆதரவுடன் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா மற்றும் பாஜக கூட்டணி ஆதரவுடன் அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் கட்சி இடையே இருமுனை போட்டி நிலவியது. இவ்விரு மாநில இடைத்தோ்தல்களும் பாஜக மற்றும் இந்தியா கூட்டணி இடையிலான பலப்பரீட்சையாக கருதப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com