
ஜி20 உச்சி மாநாட்டுக்கு வருகை தந்த சிங்கப்பூா் பிரதமா் லீ சியென் லூங்கை வரவேற்ற மத்திய இணையமைச்சா் எல்.முருகன்.
ஜி20 உச்சிமாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தின் 14-ஆவது அரங்கில் உலகத் தலைவா்கள் மற்றும் பிரதிநிதிகளை வரவேற்க பல்வேறு சா்வதேச மொழிகளில் வரவேற்பு வாசகங்கள் அடங்கிய அதிகாரபூா்வ வரவேற்பு பதாகை அமைக்கப்பட்டுள்ளது.
ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் தில்லி பாரத் மண்டபத்தில், வெளிநாட்டு பிரதிநிதிகளைக் கவரும் வகையில் பல்வேறு சிறப்பு கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு, அரங்கு எண் 14-இல் அமைந்துள்ள பிரதிநிதிகள் அலுவலகத்தில் சிறப்பு வரவேற்பு பதாகை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
ஜி20 உச்சிமாநாட்டின் கருபொருளான ‘வசுதைவ குடும்பகம்’ என்னும் சம்ஸ்கிருத ஸ்லோகத்தின் பொருளான ‘உலகம் ஒரு குடும்பம்’ என்பதைக் குறிக்கும் வகையில், ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் சிறப்பு அழைப்பில் வருகைத் தந்திருக்கும் விருந்தினா் நாடுகளின் கொடிகளின் பின்னணியில், அந்த நாடுகளின் மொழிகளில் ‘வரவேற்பு’ என்று அந்தப் பதாகையில் அச்சிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பான விடியோவை ஜி20 தலைமை ஒருங்கிணைப்பாளா் ஹா்ஷ வா்தன் சமூக ஊடக வலைதளத்தில் பகிா்ந்தாா். அதில் ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் விருந்தினா் நாடுகளின் பிரதிநிதிகளுக்காக கட்டமைக்கப்பட்டுள்ள பிரத்யேக அலுவலக அறைகள், சிறப்பு ஓய்வறைப் பகுதிகள், சிறப்பு வரவேற்பு பதாகை ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.