

திருப்பதி: ஆந்திர முதல்வராக இருந்தபோது வெளிநாட்டு நிறுவனத்துக்கு நிதி ஒதுக்கியதில் ஊழல் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் , ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.
நந்தியாலா பகுதியில் இருந்து, சந்திரபாபுவை, சிஐடி காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை சிஐடி காவல்துறையினர் கைது செய்தது ஆந்திரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரத்தில் சந்திரபாபு ஆட்சியில் இருந்தபோது இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் வகையில் ரூ 3,350 கோடி திட்டத்துக்கு 2015-ம் ஆண்டு மாநில அரசு ஒப்பந்தம் செய்தது. இதற்காக ஜெர்மனை சேர்ந்த சீமென் என்ற அமைப்பின் மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தில் மாநில அரசு பத்து சதவீத பங்கை செலுத்த வேண்டும். ஆனால், மாநில அரசின் பங்குத் தொகையில் ரூ 240 கோடி முறைகேடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலி ரசீது மற்றும் இன்வாய்ஸ்கள் மூலம் ஜிஎஸ்டியை ஏமாற்றியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இதனிடையே, ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு வழக்கில் முறைகேடுகள் நடந்துள்ளதாக திறன் மேம்பாட்டுக் கழகத் தலைவர் கோண்டுரு அஜய் ரெட்டி ஆந்திர சிஐடியில் புகார் அளித்தார். இதனையடுத்து திறன் மேம்பாட்டு கழக முன்னாள் தலைவர் இயக்குனர் உட்பட பலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தெலங்கு தேசம் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். திருப்பதி அருகே, வாகன டயர்கள் உள்ளிட்டவற்றை சாலைகளில் எரித்து போராட்டம் நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.