
நந்தியால்: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என். சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை அதிகாலை நந்தியால் நகரில் கைது செய்யப்பட்ட சம்பவம், சினிமா பாணியில் பரபரப்பாக நடந்துள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவர் சந்திரபாபு நாயுடு, வெள்ளிக்கிழமை இரவு நந்தியால் நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிவிட்டு பேருந்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது அதிகாலை 2.30 மணியளவில் ஆர்.கே. விழா மண்டபத்தை போலீஸார் சுற்றி வளைத்தனர்.
காவல்துறை டிஐஜி ரகுராமி ரெட்டி தலைமையிலான போலீஸ் குழு அங்கு வந்தபோது, என்எஸ்ஜி அதிகாரிகள் நாயுடுவை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரினார்.
இருப்பினும், அங்கிருந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் காவல்துறையின் நடவடிக்கை மற்றும் அவர்களின் இரவு நேர வருகையின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, எங்கேயும் தப்பி ஓடப் போவதில்லை என்று டிஐஜியிடம் கூறிய தெலுங்கு தேசம் கட்சியினர், காலையில் வருமாறு காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க.. ஜி20 உச்சிமாநாடு தொடக்கம்: பிரதமர் மோடி முன் பாரத் என பெயர் பலகை
அப்போது, காவல்துறை அதிகாரிகள் சந்திரபாபு நாயுடு தங்கியிருந்த பேருந்தின் கதவை நெருங்கியதும், கட்சித் தலைவர்கள் கடுமை எதிர்ப்பைக் காட்டினர் மற்றும் வழக்கு என்ன என்பதை காவலர்கள் விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், 73 வயதான தலைவர் ஓய்வெடுத்து வருகிறார். இப்போது ஏன் அவரை தொந்தரவு செய்ய விரும்புகிறீர்கள்?’’ என தெலுங்கு தேசம் கட்சி தலைவர் கல்வா சீனிவாசலு காவல்துறையிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, சந்திரபாபு நாயுடு தங்கியிருக்கும் பேருந்து கிளம்புவதாக தகவல் தங்களுக்கு வந்ததாக டிஐஜி கூறினார். ஆனால் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஓய்விற்காக மட்டுமே இந்தப் பேருந்து பயன்படுத்தப்படுவதாக கட்சியினர் தெளிவுபடுத்தினர்.
இதையடுத்து பேருந்தை சுற்றி திரண்ட தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் கைது செய்தனர்.
காலை 6 மணியளவில் நாயுடு பேருந்தில் இருந்து இறங்கியதும், போலீஸ் அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் நாயுடுவை கைது செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருத்துவ பரிசோதனைக்கு பின், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா அழைத்துச் செல்லப்பட்டார். தெலுங்கு தேசம் கட்சி தலைவர் விஜயவாடாவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...