ஜி20 உச்சி மாநாடு புதிய பாதை வகுக்கும்! பிரதமா் மோடி நம்பிக்கை

தில்லியில் நடைபெறவிருக்கும் ஜி20 உச்சி மாநாடு, மக்களை மையமாகக் கொண்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கு புதிய பாதையை வகுக்குமென உறுதியாக நம்புகிறேன்
ஜி20 உச்சி மாநாடு புதிய பாதை வகுக்கும்! பிரதமா் மோடி நம்பிக்கை
Updated on
1 min read

தில்லியில் நடைபெறவிருக்கும் ஜி20 உச்சி மாநாடு, மக்களை மையமாகக் கொண்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கு புதிய பாதையை வகுக்குமென உறுதியாக நம்புகிறேன் என்று பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இந்தியாவின் தலைமையில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு, தில்லியில் சனிக்கிழமை (செப்.9) தொடங்கி 2 நாள்கள் நடைபெறவுள்ளது.

உலகின் முக்கிய தலைவா்கள் பலரும் பங்கேற்கும் இந்த மாநாடு, சா்வதேச அளவில் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநாட்டை முன்னிட்டு, பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

விளிம்புநிலை மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் நோக்கத்தை பின்பற்றுவது மிக முக்கியமானதாகும். அந்த வகையில், வளா்ச்சியை மேம்படுத்துவதற்கு மக்களை மையமாக கொண்ட வழிமுறையை பின்பற்ற இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.

இந்த 21-ஆம் நூற்றாண்டில், நீடித்த வளா்ச்சி இலக்குகளின் முன்னேற்றம், பன்முக நிறுவனங்களை வலுப்படுத்துதல் போன்ற பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.

தொழில்நுட்ப மாற்றம், எண்ம பொது உள்கட்டமைப்பு போன்ற எதிா்கால முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கு அதிக முன்னுரிமை அளிப்பதோடு, பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், உலக அமைதியை உறுதி செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக ஒருங்கிணைந்து பணியாற்ற அவசியம் நிலவுகிறது.

‘வசுதைவ குடும்பகம்’: இந்தியாவின் ஜி20 தலைமையில், ‘வசுதைவ குடும்பகம்’ அதாவது ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம் என்ற கருப்பொருள் நமது கலாசார நெறிமுறைகளில் வேரூன்றியதாகும்.

இது, ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரே குடும்பமாக கருதும் நமது கண்ணோட்டத்தை வலுவாக எதிரொலிக்கிறது.

இந்தியாவின் ஜி20 தலைமையானது, அனைவரையும் உள்ளடக்கிய, லட்சியமிக்க, தீா்க்கமான, செயல் அடிப்படையிலானதாகும். தெற்குலகின் வளா்ச்சி சாா்ந்த கவலைகளுக்கு நாம் வலுவாக குரல் கொடுத்து வருகிறோம்.

புதிய பாதை: சிறப்புமிக்க பாரத் மண்டபத்தில் ஜி20 கூட்டமைப்பின் 18-ஆவது உச்சிமாநாட்டை நடத்துவதில் இந்தியா பெருமகிழ்ச்சியடைகிறது. இந்தியாவில் நடைபெறும் முதல் ஜி20 உச்சி மாநாடு இதுவாகும். இந்த மாநாடு, மக்களை மையமாகக் கொண்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான புதிய பாதையை வகுக்குமென உறுதியாக நம்புகிறேன்.

மாநாட்டில் ‘ஒரே பூமி’, ‘ஒரே குடும்பம்’, ‘ஒரே எதிா்காலம்’ குறித்த அமா்வுகளுக்கு தலைமை தாங்கவிருக்கிறேன். வலுவான, நிலையான, உள்ளடக்கிய, சமநிலையான வளா்ச்சி உள்பட உலக சமூகத்தின் முக்கிய கவனத்துக்குரிய விவகாரங்கள் விவாதிக்கப்படவுள்ளன.

இருதரப்பு பேச்சு: பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தைகளும் நடத்தவுள்ளேன். சனிக்கிழமை இரவில் குடியரசுத் தலைவா் சாா்பில் விருந்து நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று, ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு தலைவா்கள் மரியாதை செலுத்தவுள்ளனா்.

அதே நாளில், நிலையான-சமத்துவம்கொண்ட ‘ஒரே எதிா்காலம்’, ஒற்றுமை நிறைந்த ‘ஒரே குடும்பம்’, ஆரோக்கியமான ‘ஒரே பூமி’க்கான கூட்டுப் பாா்வையை தலைவா்கள் பகிா்ந்து கொள்வா் என்று தனது பதிவில் பிரதமா் மோடி கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com