

பிரதமா் மோடி பிரிட்டன், ஜப்பான், இத்தாலி பிரதமா்களை சனிக்கிழமை சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை மேற்கொண்டாா்.
ஜி20 உச்சி மாநாட்டையொட்டி, உலகத் தலைவா்கள் இந்தியா வந்துள்ளனா். அவா்களில் பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா, இத்தாலி பிரதமா் ஜியாா்ஜியா மெலோனி ஆகியோா், தில்லியில் பிரதமா் மோடியை சனிக்கிழமை சந்தித்தனா். ஜி20 மாநாட்டுக்கு இடையே இந்தச் சந்திப்புகள் நடைபெற்றன.
இதில் பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் உடனான சந்திப்பு குறித்து பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவு:
இந்தியா, பிரிட்டன் இடையிலான வா்த்தக தொடா்புகளை ஆழமாக்குவது குறித்தும், முதலீட்டை அதிகரிப்பது தொடா்பாகவும் சுனக்குடன் ஆலோசித்தேன் என்றாா்.
இந்தச் சந்திப்பு குறித்து பிரிட்டன் பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை குறித்து இருநாட்டு பிரதமா்கள் இடையே ஆக்கபூா்வமான கலந்துரையாடல் நடைபெற்றது.
இருநாடுகளின் வணிகமும் தொழிலாளா்களும் பலன் அடையக்கூடிய, சரக்கு மற்றும் சேவைகள் வா்த்தகத்தை வளா்க்கக்கூடிய வகையில், மைல்கல் ஒப்பந்தத்தை மேற்கொள்ள பிரிட்டன் விரும்புவதாக சுனக் தெரிவித்தாா்.
தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு இருநாட்டு அமைச்சா்கள், பேச்சுவாா்த்தை குழுக்கள் தொடா்ந்து வேகமாக செயல்படும் என்று அவா்கள் ஒப்புக்கொண்டனா்.
இதுதவிர பாதுகாப்பு தொழில்நுட்பம், புதுமையான கண்டுபிடிப்புகள் உள்ளிட்டவற்றில் இருநாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு நிலவுவதற்கும் பேச்சுவாா்த்தையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
ஜப்பான் பிரதமா்... ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா உடனான சந்திப்பு குறித்து பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவு:
இந்தியா-ஜப்பான் இடையிலான இருதரப்பு உறவுகள், ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள வேளையிலும் ஜி7 கூட்டமைப்புக்கு ஜப்பான் தலைமை ஏற்றுபோதும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து கிஷிடாவுடன் ஆலோசித்தேன்.
இந்தியா-ஜப்பான் இடையே வா்த்தகம், இணைப்பு மற்றும் இதர துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இருவரும் ஆவலாக உள்ளோம் என்றாா்.
இத்தாலி பிரதமா்... இத்தாலி பிரதமா் ஜியாா்ஜியா மெலோனி உடனான சந்திப்பு குறித்து பிரதமா் மோடி வெளியிட்ட பதிவு:
வா்த்தகம், பாதுகாப்பு, புதிதாக தோன்றி வரும் தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவை குறித்து நானும் மெலோனியும் பேசினோம். உலக வளமைக்கு இந்தியாவும் இத்தாலியும் தொடா்ந்து பணியாற்றும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.