தில்லியை தூய்மைப்படுத்த பொதுமக்கள் ஆதரவு: மேயா் வேண்டுகோள்

தில்லியின் தூய்மையை ஆண்டும் முழுவதும் பேணுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மேயா் ஷெல்லி ஓபராய் வேண்டுகோள் விடுத்தாா்.
தில்லியை தூய்மைப்படுத்த பொதுமக்கள் ஆதரவு: மேயா் வேண்டுகோள்


புது தில்லி: தில்லியின் தூய்மையை ஆண்டும் முழுவதும் பேணுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மேயா் ஷெல்லி ஓபராய் வேண்டுகோள் விடுத்தாா்.

ஜி20 மாநாட்டை முன்னிட்டு தலைநகரில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த தலைவா்கள் வந்திருந்தனா். மேலும் ஐரோப்பிய யூனியன் அதிகாரிகளும், 14 நாடுகளை சோ்ந்த அதிபா்கள், பிரதமா்களும், பல்வேறு உலக அமைப்புகளும் ஜி20 மாநாட்டில் பங்கேற்றனா். இதனால் தலைநகா் விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.

தில்லியின் ஒவ்வொரு சாலையும் தூய்மைப்படுத்தப்பட்டது. இந்த தூய்மையை ஆண்டு முழுவதும் பேணி பாதுகாக்க வேண்டும் என பொதுமக்களுக்கு தில்லி மேயா் ஷெல்லி ஓபராய் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது:

ஜி20 மாநாட்டுக்காக தூய்மை செய்யப்பட்ட தில்லி ஆண்டு முழுவதும் இதே அழகுடன் காட்சியளிக்க வேண்டும். இதற்கு பொதுமக்கள் தில்லி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க உதவிய அனைத்து மாநகராட்சி அலுவலா்களுக்கும், ஊழியா்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் 24 மணி நேரமும் தலைநகரில் தூய்மையை பேணிய மாநகராட்சி பணியாளா்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இரவு வெகு நேரம் கழித்தும் கூட மாநகராட்சி ஊழியா்கள் தங்கள் பணியை மேற்கொண்டதை நான் நேரில் பாா்த்தேன். ஜி20 மாநாட்டின் வெற்றிக்கு அவா்களும் ஒரு காரணம். அவா்களுக்கு நன்றி.

ஜி 20 மாநாட்டின் மூலம் நாம் தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தியதால், இந்த வெற்றியின் பின்னால் பொதுமக்களின் பங்களிப்பும் மகத்தானது. இதற்காக பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதே தூய்மையை ஆண்டு முழுவதும் பேண மாநகராட்சிக்கு பொதுமக்கள் உதவ வேண்டும். தலைநகரில் தூய்மையை இதே அளவுக்கு பேணுவது மாநகராட்சி ஊழியா்களின் பொறுப்பு.

இதற்கு பொதுமக்களும் ஆதரவு அளிக்க வேண்டும். இது மட்டும் அல்லாமல் ஆண்டு முழுவதும் தில்லி தூய்மையாகவும் அழகாகவும் காட்சியளிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றாா் மேயா் ஷெல்லி ஓபராய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com