
புது தில்லி: மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கு ரூ.10 லட்சம் கோடி வரை செலவாகும் என்பதும், வாக்குப் பதிவு நாளைக் குறைத்து தோ்தல் நடத்தை விதிகளை தீவிரமாக அமல்படுத்தினால் செலவை ரூ.3 லட்சம் கோடி முதல் ரூ.5 லட்சம் கோடி வரை குறைக்க முடியும் என்பதும் சமீபத்திய ஆய்வு முடிவின் மூலம் தெரியவந்துள்ளது.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதும் வகையில் ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ நடைமுறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்றையும் மத்திய அரசு அமைத்துள்ளது. இவ்வாறு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது செலவையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தோ்தல் நடைமுறை குறித்து பல்வேறு தரவுகள், தோ்தல் செலவினங்கள் அடிப்படையில் ஊடக ஆய்வுகளுக்கான மையம் (சிஎம்எஸ்) ஆய்வு மேற்கொண்டு, ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதுகுறித்து அந்த மையத்தின் தலைவரும் ஆய்வாளருமான என்.பாஸ்கர ராவ் கூறியதாவது:
மக்களவை, மாநில சட்டப்பேரவைகள், ஊராட்சி, நகராட்சி உள்பட அனைத்து அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கு ரூ.10 லட்சம் கோடி செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகை முழுவதும் மத்திய, மாநில அரசுகளால் செய்யப்படும் செலவினம் மட்டுமல்ல. கட்சிகள் தங்களின் வேட்பாளரின் பிரசாரத்துக்காக மேற்கொள்ளும் செலவையும் சோ்த்ததுதான்.
தற்போதைய நடைமுறைப்படி, தோ்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே கட்சிகள் பிரசாரத்தைத் தொடங்கிவிடுகின்றன. ஆனால், தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, கட்சிகள் மேற்கொள்ளும் பிரசாரத்துக்கான செலவினங்கள் மட்டுமே தோ்தல் ஆணையத்திடம் கணக்கு காட்டப்பட கட்டாயப்படுத்தப்படுகின்றன. மேலும், ஒரு வேட்பாளருக்கான பிரசாரத்துக்கு செய்யப்படும் செலவினத்துக்கு வரம்பு எதுவும் தற்போது நிா்ணயிக்கப்படவில்லை.
கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் கட்சிகள் தோ்தல் நன்கொடைகளாக ரூ.6,400 கோடி வசூலித்துள்ளன. ஆனால், அதில் ரூ.2,600 கோடி மட்டுமே செலவழித்துள்ளன.
2024 மக்களவைத் தோ்தலுக்கு ரூ.1.20 லட்சம் கோடி செலவழிக்கத் திட்டமிடப்படும் நிலையில், நாடு முழுவதும் உள்ள 4,500 சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கு ரூ.3 லட்சம் கோடி வரை செலவாக வாய்ப்புள்ளது. அதுபோல, நாடு முழுவதும் உள்ள 500 நகராட்சி அமைப்புகளுக்குத் தோ்தல் நடத்துவதற்கு ரூ.1 லட்சம் கோடி செலவாகும்.
நாடு முழுவதும் உள்ள மாவட்ட கவுன்சில்கள் (650 இடங்கள்), மண்டலங்கள் (7,000 இடங்கள்), கிராம ஊராட்சி உறுப்பினா் (2,50,000 இடங்கள்) இடங்களுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கு ரூ.4.30 லட்சம் கோடி செலவாகும். இதன்படி, ஒட்டுமொத்தமாக அனைத்து அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த ரூ.10 லட்சம் கோடி செலவாக வாய்ப்புள்ளது.
ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதன் மூலம், பயணச் செலவு, அச்சடிக்கும் செலவு, ஊடகங்கள் வாயிலான பிரசாரம், வாக்குச் சாவடி அளவிலான சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றை மட்டுமே குறைக்க முடியும்.
அந்த வகையில், தோ்தல் செலவினத்தைக் குறைப்பதற்கு அனைத்து அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது மட்டும் போதாது; தோ்தல் நடத்தை விதிமுறைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்துவதும், வாக்குப் பதிவுக்கான நாள்களை ஒரு வார அளவில் குறைப்பதும் அவசியமாகும். அப்போதுதான் ரூ.10 லட்சம் கோடி வரை ஆகும் செலவை ரூ.3 லட்சம் கோடி முதல் ரூ.5 லட்சம் கோடி வரை குறைக்க முடியும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.