
ரயிலில் வரும் பயணிகளை விருந்தினர்களாகக் கருதி சிறந்த சேவைகளை வழங்குமாறு ரயில்வே அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாசார மையத்தில் இந்திய ரயில்வே சேவைகளின் குழுவினர் குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்துப் பேசினர்.
அப்போது அவர்களுடன் குடியரசுத் தலைவர் முர்மு பேசியது,
ரயில்வே என்பது நாட்டின் உயிர்நாடி. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் தனது பயணத்தை மேற்கொள்கின்றனர். லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பளித்து வருகிறது. மேலும் ரயில்வே பணி என்பது பலரின் கனவாக உள்ளது.
அதேநேரத்தில், ரயில்வே இந்தியப் பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஒற்றுமை மற்றும் சமூக கலாசார பன்முகத்தன்மைக்கும் முதுகெலும்பாக உள்ளது.
படிக்க: தமிழகத்தில் செப்.20 வரை மழைக்கு வாய்ப்பு!
ரயில்வே சுற்றுச்சூழலின் வளமான பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதும், இந்திய ரயில்வே உலகிலேயே சிறந்த தரமான சேவைகளை வழங்கும் நிறுவனமாக உருவாக்குவது உங்களைப் போன்ற இளம் அதிகாரிகளின் பொறுப்பாகும்.
ரயில் பயணம் செய்பவர்கள் தங்கள் பயணங்களின் நினைவுகளை சுமந்துச்செல்கின்றனர். வாடிக்கையாளர்கள் குறிப்பாக பயணிகளை உங்கள் விருந்தினர்களாகக் கருதி, சிறந்த சேவை மற்றும் சிறந்த அனுபவத்தை வழங்குமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.
படிக்க: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை அதிகப்படுத்த நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அதேசமயம் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
இந்திய ரயில்வே நிர்வாகம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் புதுமையுடனும் தகவமைப்புடன் சிறந்து விளங்குவதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று அவர் கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...