

தொகுதிப் பங்கீடு குறித்து "இந்தியா' கூட்டணிக் கட்சியினர் விரைவில் பேச்சு நடத்தி முடிவு செய்ய உள்ளனர் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தில்லியில் புதன்கிழமை தெரிவித்தார்.
பொது வேட்பாளர்: தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற "இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்ற பிறகு டி.ஆர். பாலு கூறியதாவது: சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகள் விரைவில் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. மேலும், வரும் தேர்தல்களில் "இந்தியா' கூட்டணி சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவார்.
வரும் சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட அந்தந்த மாநிலங்களில் பூர்வாங்க முடிவுகளை எடுக்க கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் பேச்சுவார்த்தை தொடங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கூட்டணியின் உறுப்பு கட்சிகளிடம் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கமாக ஒருங்கிணைப்புக் குழுவுக்கு அனுப்பிவைக்கவும் கூறப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் முதல் வாரத்தில் "இந்தியா' கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் மத்திய பிரதேசம் போபாலில் நடைபெற உள்ளது; தொடர்ந்து பாட்னா, தில்லி, சென்னை, குவாஹாட்டி, நாகபுரி ஆகிய 5 இடங்களில் முதல் கட்டமாக பொதுக்கூட்டங்களை நடத்த பிரசாரக் குழு பரிந்துரை செய்துள்ளது.
பொதுவாக பாஜக ஆட்சியில் நிலவும் விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி, மணிப்பூர் பிரச்னை, வேலைவாய்ப்பின்மை, ஊழல் போன்ற விவகாரங்களை முன்னிட்டு இந்தக் கூட்டங்களில் பிரசாரங்களை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், அந்தந்தப் பகுதிகளின் பிரச்னை தொடர்பான விவகாரங்கள் அடிப்படையிலும் இந்தப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஊடகங்களில் "இந்தியா' கூட்டணி குறித்து தவறான செய்திகள் பரப்பப்படுகிறது. அத்தகைய ஊடகங்களின் நிகழ்ச்சிகளில் "இந்தியா' கூட்டணி சார்பில் யாரும் பங்கேற்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் தேர்தல்களில் "இந்தியா' கூட்டணியில் பங்கேற்றுள்ள உறுப்புக் கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் பேச்சுவார்த்தை நடத்தி பொது வேட்பாளரை நிறுத்தும். முதல்கட்டமாக பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட உள்ளனர். பின்னர், நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள். பிரச்னைகள் ஏதாவது இருந்தால் ஒருங்கிணைப்புக் குழு தலையிடும் என்றார் டி.ஆர்.பாலு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.