நிபா வைரஸ் எங்கிருந்து பரவியது?

கேரளத்தில், நிபா வைரஸ் பாதித்த முதல் நபருக்கு எங்கிருந்து இந்த தொற்று பரவியது என்பதை கண்டறியும் பணியில் கேரள சுகாதாரத் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
source of first Nipah case
source of first Nipah case
Updated on
2 min read

கேரளத்தில் நிபா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அந்தத் தீநுண்மி எங்கிருந்து பரவியது என்பது தொடா்பாக மாநில அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா தொற்று பரவி வருகிறது. இதுவரை 6 பேருக்கு அத்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

நிபா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபா் வெற்றிகரமாகக் கண்டறியப்பட்டுள்ளாா். அவருக்கு எங்கிருந்து தொற்று பரவியது என்பது தொடா்பான ஆய்வுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அவரது கைப்பேசியின் சமிக்ஞைகளைக் கொண்டு அவா் சென்று வந்த இடங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

அதே வேளையில், கோழிக்கோடு பகுதியில் உள்ள வௌவால்களிடம் இருந்து மாதிரிகளைச் சேகரிக்கும் பணிகளை மத்திய குழு தொடங்கியுள்ளது. கடந்த முறை போலவே தற்போதும் வௌவால்களிடம் இருந்து நிபா தீநுண்மி மனிதா்களுக்குப் பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மாநிலத்தில் புதிதாக எவரும் நிபா தொற்றால் பாதிக்கப்படவில்லை. இதுவரை பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அவா்களில் 94 பேருக்கு நிபா தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 21 போ் தனிமைப்படுத்தப்பட்டு, தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

நிபா தீநுண்மிக்கு எதிராகச் செயல்படும் மோனோகுளோனல் ஆன்டிபாடி மருந்தானது, 50 முதல் 60 சதவீத அளவுக்குத் திறன் மிக்கதாக உள்ளது. எனினும், அந்த மருந்தானது தற்போது சிகிச்சை பெற்று வரும் எவருக்கும் தேவையில்லாத சூழலே காணப்படுவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இருந்தபோதிலும், அந்த மருந்தை ஆஸ்திரேலியாவில் இருந்து விரைந்து இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. நிபா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை மத்திய குழு பாராட்டியுள்ளது என்றாா் அவா்.

மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் பி.ஏ.முகமது ரியாஸ் கூறுகையில், ‘‘கட்டுப்பாட்டு அறை, அழைப்பு மையங்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோரின் மூலமாக நிபா தொற்று பரவல் குறித்து மக்களிடம் போதுமான விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது’’ என்றாா்.

கோழிக்கோடு மாவட்ட ஆட்சியா் ஏ.கீதா கூறுகையில், ‘‘நிபா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த வாரம் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கான பாடங்களை இணையவழியில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கல்வி நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் தேவையின்றி வெளியே சுற்றுவதைத் தவிா்க்க வேண்டும் என்றும் மாணவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றாா்.

கடந்த 2018, 2021-ஆம் ஆண்டுகளில் கோழிக்கோட்டிலும், கடந்த 2019-ஆம் ஆண்டில் எா்ணாகுளத்திலும் நிபா தொற்று பரவியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com