
கே.ராதாகிருஷ்ணன் (கோப்புப் படம்)
கேரளத்தில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனுக்கு கோவிலில் தீண்டாமைக் கொடுமை நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தில் பட்டியல், பழங்குடியினர் நலன் மற்றும் இந்து அறநிலையத் துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் கே.ராதாகிருஷ்ணன். இவர் கேரளத்தின் கோட்டயத்தில் பாரதிய வேலன் சேவை சங்கம் (பிவிஎஸ்) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
அப்போது பையனூர் கோவில் விழாவில் பங்கேற்றபோது தனக்கு இழைக்கப்பட்ட தீண்டாமை கொடுமையை வேதனையுடன் குறிப்பிட்டார்.
கண்ணூர் மாவட்டத்தின் பையனூரில் உள்ள சிவன் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது குத்துவிளக்கு ஏற்றுவதற்கான தீபத்தை தனது கையில் தராமல் அர்ச்சகர் அவமதித்ததாக வருத்தம் தெரிவித்தார்.
படிக்க | 2029-ல்தான் மகளிர் இடஒதுக்கீடு?
அவர் பேசியதாவது, தீபத்தை ஏற்றிய தலைமை அர்ச்சகர், அதனை மற்றொரு அர்ச்சகரிடம் கொடுத்து குத்துவிளக்கை ஏற்றச்செய்தார். குத்துவிளக்கு ஏற்ற காத்திருந்த என்னை பொருட்படுத்தாமல், தீபத்தை கீழே வைத்துவிட்டார். தரையில் இருந்து தீபத்தை எடுத்து விளக்கை ஏற்றுவேன் என பூசாரி கருதினார். ஆனால் அதனை நான் எடுக்கவில்லை.
பின்னர் கோவில் செயல் அதிகாரி தீபத்தை எடுத்து தந்தார். ஆனால் அதனைப் பெற நான் மறுத்துவிட்டேன். எனக்கு நேர்ந்த தீண்டாமையால் உடன் வந்த மற்றவர்களும் குத்துவிளக்கு ஏற்ற மறுத்தனர் எனக் குறிப்பிட்டார்.
மேலும், தன் பணத்தில் தீண்டாமை பார்க்காத பூசாரிகள் தனக்கு எதிராக மட்டும் தீண்டாமை கடைபிடிப்பது ஏன்? நிலவுக்கு சந்திரயான் விண்கலம் அனுப்பியவர்களை விட சாதி கட்டமைப்பை உருவாக்கியவர்கள் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். மக்களை எப்படி பிரித்து பார்ப்பது என்பது சாதி கட்டமைப்பை உருவாக்கியவர்களுக்கு தெரிந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்துக்கு மாநில முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G