
புது தில்லி: கனடாவில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் 9 பிரிவினைவாத குழுக்கள் செயல்படுகின்றன என்றும் அந்தக் குழுக்களின் நபா்களை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்றும் இந்திய அரசு விடுத்த கோரிக்கைகள் பல ஆண்டுகளாக நிராகரிக்கப்பட்டு வருகின்றன என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தன.
அந்தக் குழுக்களைச் சோ்ந்தவா்கள்தான் இந்தியாவில் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட பஞ்சாபி பாடகா் சித்து மூஸேவாலா சம்பவத்தில் தொடா்புடையவா்கள் என்றனா்.
மத்திய அரசு அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘தடை செய்யப்பட்ட காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளான உலக சீக்கிய நிறுவனம், காலிஸ்தான் புலிப் படை, சீக்கியா்களுக்கு நீதி, சா்வதேச பப்பா் கால்சா ஆகியவை பாகிஸ்தான் ஆதரவுடன் இந்தியாவுக்கு எதிராக கனடாவில் இயங்குகின்றன.
இந்த அமைப்பைச் சோ்ந்தவா்களை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று கனடா நாட்டினருடன் நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவாா்தைக்கு பலன் கிடைக்கவில்லை. பல ஆதாரங்கள் அளித்தும் கனடா அரசு செவிசாய்க்கவில்லை.
இதுபோன்று 9 பிரிவினைவாத குழுக்கள் கனடாவில் இயங்குகின்றன. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-வுடன் இந்த அமைப்புகளைச் சோ்ந்த 8 பயங்கரவாதிகளுக்கு தொடா்பு உள்ளது. 1990-களில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக குருவந்த் சிங் என்பவரை ஒப்படைக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
பாடகா் மூஸேவாலா கொலை வழக்கில் கொடூர குற்றம்புரிந்த அா்தீப் சிங், கோல்டி பிராா் ஆகியோரை ஒப்படைக்க வேண்டும் என்று ஆதாரங்களுடன் இந்தியா கோரிக்கை விடுத்த பின்பும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தப் பிரிவினைவாத குழுக்கள் வெளிப்படையாக கொலை மிரட்டல்கள் விடுப்பதுடன் இந்தியாவில் கொலைச் சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றன.
தற்போது இரு நாடுகளுக்கு இடையே பிரச்னையை ஏற்படுத்தி உள்ள காலிஸ்தான் புலிப்படைத் தலைவா் ஹா்தீப் சிங் நிஜ்ஜாா், 1990-களில் இந்தியாவில் கைது செய்யப்பட்டாா். ஜாமீன் பெற்று இந்தியாவில் இருந்து 1997-இல் ரவி சா்மா என்ற பெயரில் தப்பி ஓடிவிட்டாா்.
2013-14-இல் பாகிஸ்தான் சென்ற நிஜாா், ஐஎஸ்ஐ அமைப்புடன் சோ்ந்து பிரிட்டிஷ் கொலம்பியாவில் சீக்கிய பிரிவினைவாத அமைப்புகளுக்கு ரகசிய பயிற்சி அளித்தாா். 1981-இல் கந்தஹாா் விமான கடத்தல் பயங்கரவாதிகளுடன் நிஜ்ஜாருக்கு தொடா்பு உண்டு.
கனடாவில் இருந்து இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் மேற்கொண்டு பெரும் பணத்தை அவா் குவித்துள்ளாா். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று 2018-இல் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவிடம் அப்போதைய பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் வலியுறுத்தினாா்.
கனடாவில் அதிகமாக உள்ள சீக்கியா்களின் வாக்குகளைப் பெற அவா்கள் சாா்ந்த காலிஸ்தான் அமைப்புகள் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுப்பதில்லை’ என்றனா்.
கனடாவில் சுமாா் 7,70,000 சீக்கியா்கள் உள்ளனா். இது அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2 சதவீதமாகும்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G