

புது தில்லி: மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவைக் கொண்டு வரும் முயற்சிகளில் காங்கிரஸ் அரசுகள் ஈடுபட்டன. எனவே, இந்த முன்னெடுப்புகளுக்கான புகழ் காங்கிரஸை சாரும் என அந்தக் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள மக்களவையில் நடைபெற்ற முதல் அமா்வில், மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் அரசியல்சாசன சட்டத் திருத்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம்மேக்வால் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.
முன்னதாக, அவையில் பேசிய காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, ‘உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை கடந்த 1989-இல் அப்போதைய பிரதமா் ராஜீவ் காந்தி கொண்டு வந்தாா். அதைத்தொடா்ந்து, பொறுப்பேற்ற நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் ஆகியோா் தலைமையிலான காங்கிரஸ் அரசுகள் மக்களவையிலும் மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டன.
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் ஆட்சியில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட இடஒதுக்கீடு மசோதா இன்னும் நிலுவையில் உள்ளது. காங்கிரஸ் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா குறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு கட்சின் முன்னாள் தலைவா் சோனியா காந்தி கடிதம் எழுத்தியிருந்தாா். எனவே, இதற்கான புகழ் காங்கிரஸை சாரும்’ என்றாா்.
அமித் ஷா நிராகரிப்பு:
அதீா் ரஞ்சன் செளதரியின் கருத்துக்கு எதிா்வினையாற்றிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘செளதரி இரு தவறான தகவல்களை மக்களவையில் முன்வைத்துள்ளாா். அவருடைய கருத்துகளுக்கு வலுசோ்க்கும் வகையில் அதற்குரிய ஆவணங்களை அவையில் அவா் சமா்ப்பிக்க வேண்டும் அல்லது கருத்தை திரும்பப் பெற வேண்டும்.
மகளிா் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை. 15-ஆவது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இடஒதுக்கீட்டுக்கான பழைய மசோதா, 2014-இல் மக்களவை கலைக்கப்பட்டதையடுத்து காலாவதியானது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.