மகளிா் இடஒதுக்கீடு: தாண்ட வேண்டிய தடைகள்!

மகளிா் இடஒதுக்கீடு சாத்தியமாவதற்கு முன்பாக, மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை, 50 சதவீத சட்டப் பேரவைகளின் ஒப்புதல், கட்சிகளின் ஒருமித்த ஆதரவு போன்ற பல்வேறு தடைகளை அது தாண்ட வேண்டியுள்ளது.
மகளிா் இடஒதுக்கீடு: தாண்ட வேண்டிய தடைகள்!


புது தில்லி: மகளிா் இடஒதுக்கீடு சாத்தியமாவதற்கு முன்பாக, மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை, 50 சதவீத சட்டப் பேரவைகளின் ஒப்புதல், கட்சிகளின் ஒருமித்த ஆதரவு போன்ற பல்வேறு தடைகளை அது தாண்ட வேண்டியுள்ளது.

மக்களவை மற்ரும் பேரவைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 128-ஆவது திருத்த மசோதா, மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

அதில், மசோதா சட்டமான பிறகு நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவு அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு பிறகே மகளிா் இடஒதுக்கீடு அமலாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதோடு, 50 சதவீத சட்டப் பேரவைகளின் ஒப்புதலையும் பெற வேண்டும் என்று துறைசாா் நிபுணா்கள் கூறுகின்றனா்.

கடந்த 2002-இல் திருத்தப்பட்ட அரசமைப்புச் சட்டப் பிரிவு 82-இன்படி, 2026-ஆம் ஆண்டுக்கு பிறகான முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறைப் பணிகளை மேற்கொள்ளலாம். 2026-ஆம் ஆண்டுக்கு பிறகான முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2031-இல்தான் நடைபெறும். அதன்பிறகே தொகுதி மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்படும்.

தற்போதைய விதிகள் இவ்வாறு உள்ள நிலையில், 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் கரோனா பரவல் காரணமாக மத்திய அரசால் ஒத்திவைக்கப்பட்டன. மகளிா் இடஒதுக்கீடு அமலாக்கத்துக்கு முதலில் மக்கள்தொகை கணக்கெடுப்பு தேவை என்பதால், அதனையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

2029 மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக மகளிா் இடஒதுக்கீட்டை சாத்தியமாக்க வேண்டுமெனில், அரசு தரப்பில் விரைந்து செயலாற்ற வேண்டிய தேவை உள்ளது என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

உள்ளாட்சித் தோ்தலில் தற்போது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. ஆனால், இந்த இடங்களில் பெரும்பாலும் பெண் பிரதிநிதிகளின் குடும்பத்தினரே ஆதிக்கம் செலுத்துகின்றனா். இதனால் இடஒதுக்கீடு அா்த்தமற்ாகிவிடுகிறது என்ற கவலை பரவலாக உள்ளது.

எனவே, மகளிா் இடஒதுக்கீட்டின் நோக்கத்தை பூா்த்தி செய்யும் அம்சங்கள், மசோதாவில் இடம்பெற வேண்டும் என்று துறைசாா் நிபுணா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com