முதுநிலை மருத்துவம்: நீட் தேர்வில் மைனஸ் மார்க், பூஜ்ஜியம் எடுத்தவர்களும் தகுதியா?

நீட்-முதுநிலை தேர்வில் மைனஸ் மதிப்பெண் எடுத்த 13 பேரும், பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்த 14 பேரும் கலந்தாய்வில் பங்கேற்க தகுதிபெறுவார்கள் என்ற தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க நீட் தகுதி மதிப்பெண் எதுவும் தேவையில்லை என்றால், நீட்-முதுநிலை தேர்வில் மைனஸ் மதிப்பெண் எடுத்த 13 பேரும், பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்த 14 பேரும் கலந்தாய்வில் பங்கேற்க தகுதிபெறுவார்கள் என்ற தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதாவது, நடந்து முடிந்த நீட் முதுநிலை தேர்வில், மொத்த தேர்ச்சி விவரங்களை ஆய்வு செய்ததில், 14 மருத்துவர்கள் நீட் தேர்வில் வெறும் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்துள்ளனர். அவர்களையும் தாண்டி, 13 பேர் மைனஸ் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக ஒருவர் 800க்கு மைனஸ் 40 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

அப்பாடியானால், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க நீட் தோ்வில் பங்கேற்றிருந்தால் போதுமானது என்றும், தகுதி மதிப்பெண் எதுவும் தேவையில்லை என்றும் மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்திருப்பதால், மைனஸ் மற்றும் பூஜ்ஜிய மதிப்பெண் எடுத்தவர்களுடன் 800க்கு மைனஸ் 40 மதிப்பெண் எடுத்தவரும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெறுகிறார் என்பதுதானே அர்த்தமாகிறது?

அதாவது, ஒட்டுமொத்தமாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த தேர்வை எழுதியுள்ளனர். அதில், 200517வது ரேங்க் எடுத்தவருக்கும் முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கப்போகிறது.

இதில் இன்னும் ஆழமாகச் சென்று ஆய்வு செய்தால், நீட் தேர்வு எழுதி 50 மதிப்பெண்ணுக்கும் குறைவாக மதிப்பெண் எடுத்த 700 பேருக்கும் கூட முதுநிலை மருத்துவம் படிக்க வாய்ப்பு அளிக்கப்படவிருக்கிறது. இதனால், யார் வேண்டுமானாலும் நீட் முதுநிலை தேர்வெழுதலாம்.. பூவா தலையா போட்டுப் பார்த்து விடைகளை குறித்துவைத்துவிட்டு வரலாம் என்பதைப் போல ஆகிவிடுகிறதே என்ற கேள்வி பலருக்கும் எழத்தான் செய்கிறது.

அதாவது, நீட் தேர்வில் ஒட்டுமொத்தமாக 200 கேள்விகள் கேட்கப்படும். அதற்கு விடையை தேர்வு செய்யும் வகையில் அமைந்திருக்கும். ஒரு  கேள்விக்கு நான்கு மதிப்பெண்கள். தவறாக பதிலளித்திருந்தால் ஒரு நெகடிவ் மதிப்பெண். 

நீட் தேர்வுக்குத் தயாராகாமல், கண்ணை மூடிக்கொண்டு ஒருவர் வினாக்களுக்கு ஏதோ ஒரு பதிலை குறியிடுகிறார் என்றால் கூட, அவருக்கு குறைந்தது 50 மதிப்பெண்களாவது கிடைத்துவிடும். அதற்கும் கீழே மதிப்பெண் எடுப்பது என்றால், மேலே சொன்ன உதாரணத்தையும் விட மோசமான நிலைதான். அவர்களுக்கும் கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்றால்.. நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து, குறைவான மதிப்பெண் எடுத்துவிடுவோமோ என்ற அச்சத்தில் தேர்வெழுத வராதவர்கள் மட்டும்தான் இதில் கவலைப்பட வேண்டுமா?

மைனஸ் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு நியூரோ சர்ஜன் போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்ந்து பயிலும் வாய்ப்பு வழங்கினால்.. அவர்களிடம் சிகிச்சை பெறச் செல்லும் நோயாளிகள்நிலைதான் பாவமா? அல்லது மருத்துவம் பயில நீட் தேர்வு கட்டாயம் என்பதை இன்னமும் உறுதிபடக் கூறுவதை கேட்டுக்கொண்டிருப்பவர்கள்தான் அப்பாவிகளா என்ற எண்ணற்றக் கேள்விகள் எழுகின்றன.

நாடு முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ மற்றும் பல் மருத்துவப் பட்டமேற்படிப்பான எம்டிஎஸ் படிப்புகளுக்கான இடங்கள் முதுநிலை நீட் தோ்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

இந்த நீட் தோ்வை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது. நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த இடங்களுக்கும், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களின் இடங்களுக்கும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்குமான கலந்தாய்வை மத்திய மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) இணையவழியில் நடத்தி வருகிறது.

எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ மற்றும் எம்டிஎஸ் படிப்புகளுக்கான 2023-24-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு இணையதளத்தில் கடந்த ஜூலை 27-ஆம் தேதி தொடங்கியது.

மூன்று சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. மூன்றாம் சுற்று முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அதிக இடங்கள் காலியாகவுள்ளதால், நீட் தோ்வு எழுதிய அனைவரையும் பங்கேற்கச் செய்து, அந்த இடங்களை நிரப்புவதற்காக நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக மருத்துவக் கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது.

எனவே, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் புதிய விதிகளின்படி, நீட் தோ்வு எழுதிய அனைவரும் இணையவழியில் பதிவு செய்து பங்கேற்கலாம் என்றும், ஏற்கெனவே பதிவு செய்தவா்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் போக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 50 சதவீத இடங்கள், தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்தி வருகிறது.

மாநில இடங்களுக்கான கலந்தாய்வு
இணையதளங்களில் கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கியது. இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு புதிய அறிவிப்பின்படி தகுதி மதிப்பெண் எதுவுமின்றி நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com