உத்தர பிரதேசம் வாராணசியில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகிற செப். 23(சனிக்கிழமை) அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, தனது சொந்த தொகுதியான உத்தர பிரதேச மாநிலம் வாராணசிக்கு வருகிற செப். 23 ஆம் தேதி செல்லவிருக்கிறார்.
இந்நிலையில் விளையாட்டுத் துறைக்கான கட்டமைப்பை மேம்படுத்தும் பொருட்டு இங்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது.
30 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் ரூ.450 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. சுமார் 30,000 பேர் இதில் அமர முடியும். கடவுள் சிவனை அடிப்படையாக கொண்டு இந்த கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திரிசூலம் வடிவலான விளக்கு கோபுரங்களும் உடுக்கை வடிவலான மையப்பகுதியும் பிறை நிலா வடிவலான மேற்கூறையும் அமைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுவார் என்றும் கூறப்பட்டது.
இதையும் படிக்க | இதழியலில் செய்யறிவு (ஏஐ) தொழில்நுட்பம்: ஆபத்தா, வாய்ப்பா?
இந்நிலையில் பிரதமர் அலுவலகம் இதனை உறுதி செய்துள்ளது, 'உத்தரபிரதேசத்தில் ருத்ராக்ஷ் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெறும் காசி சன்சத் சமஸ்கிருத மஹோத்சவின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார், மேலும் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள 16 பள்ளிகளைத் திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து, வாராணசியில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். நவீன உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பிரதமரின் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு படியாக இது இருக்கும்' என்று கூறியுள்ளது.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.
எல்&டி நிறுவனம் உருவாக்கும் இந்த மைதானம் இரண்டு ஆண்டுகளுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.