
தலைநகர் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடியின் காலில் விழுந்து வணங்கிய வானதி சீனிவாசனைத் தடுத்து, காலில் விழக்கூடாது என அறிவுரை கூறியுள்ளார் பிரதமர் மோடி.
நாடாளுமன்றத்தில் சுமார் 27 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா கடந்த வாரம் பிரதமர் மோடியால் நிறைவேற்றப்பட்டது. மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதற்குப் பிரதமர் மோடிக்கு பல தலைவர்களும், எம்.பி.க்களும் வாழ்த்து தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.
இந்த மசோதாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் மகளிரணி சார்பில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து, பூக்களைத் தூவியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
படிக்க: மீண்டும் கோவையில் போட்டியிடுகிறேன்: கமல்ஹாசன்
இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும் பாஜக மகளிரணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் மோடியை வரவேற்றார். அப்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு நன்றி தெரிவித்து பூக்கொத்து கொடுத்த அவர், திடீரென பிரதமர் மோடி காலில் விழுந்து வணங்கினார். இதைக் கவனித்த பிரதமர் மோடி சட்டென்று தடுத்து நிறுத்தினார்.
இதுபோல காலில் விழக்கூடாது என்று வானதி சீனிவாசனுக்கு அறிவுரை கூறினார். இந்த நிகழ்ச்சியில் மேடையில் மகளிர் அணி நிர்வாகிகள் சிலரும் பிரதமர் காலில் விழுந்து வணங்கியபோது, பதிலுக்குப் பிரதமர் மோடியும் அவர்களின் காலைகளைத் தொட்டு வணங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...