லேப்டாப், கம்ப்யூட்டர் இறக்குமதிக்கு ஓராண்டு காலநீட்டிப்பு செய்ய வாய்ப்பு!

மடிக்கணினிகள், கணினிகள் மற்றும் டேப்லட் உள்ளிட்ட மின்னணுப் பொருட்களை இறக்குமதி செய்ய ஓராண்டு காலநீட்டிப்பு செய்ய வாய்ப்புள்ளதாக மத்திய அரசு சூசகமாகத் தெரிவித்துள்ளது.
லேப்டாப், கம்ப்யூட்டர் இறக்குமதிக்கு ஓராண்டு காலநீட்டிப்பு செய்ய வாய்ப்பு!


புதுதில்லி: மடிக்கணினிகள், கணினிகள் மற்றும் டேப்லட் உள்ளிட்ட மின்னணுப் பொருட்களை இறக்குமதி செய்ய கட்டாய உரிமம் கோரும் உத்தரவை மத்திய அரசு ரத்து செய்யக்கூடும் என்ற நிலையில், நம்பகமான நாடுகளில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதிக்கக் கூடும். எனினும், இந்த பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் ஒரு போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்தப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு ஓராண்டு காலநீட்டிப்பு செய்ய வாய்ப்புள்ளதாக மத்திய அரசு சூசகமாகத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தனிநபர் கணினிகள் மற்றும் மடிக்கணினிகளின் இறக்குமதியில் சீனாவின் பங்கு 70-80 சதவிகிதமாக உள்ளது. மத்திய அரசு கணினிகள் மற்றும் மடிக்கணினிகள் மீதான இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை நவம்பர் 2024 வரை தாமதப்படுத்தலாம் என்றும், அதற்கான தடைகள் தொடங்குவதற்கு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை கால அவகாசம் கோரி வந்த ஐ.டி ஹார்டுவேர் நிறுவனங்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கலாம் என்று கூறப்படுகிறது. 

ஒரு மாதத்திற்கு முன்பு, மடிக்கணினிகள், கணினிகள் மற்றும் டேப்லட் உள்ளிட்ட மின்னணுப் பொருட்கள் வெளிநாடுகளில் இறக்குமதி செய்வதற்கு உரிமத் தேவையை விதிக்க மத்திய அரசு முயன்றது. ஆனால் தொழில்துறையின் வலுவான பின்னடைவுக்குப் பிறகு அக்டோபர் 31 ஆம் தேதி வரை இந்த உத்தரவை அமல்படுத்துவதை தாமதப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அரசு அளிக்க இருக்கும் நிவாரணம் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. 

இந்த நிவாரணத்திற்கு இறக்குமதி வரம்பு, இறக்குமதி மேலாண்மை அமைப்பு எனப்படும் அரசாங்க போர்ட்டலில் பதிவு செய்யும் நிறுவனங்களைப் பொறுத்தாக இருக்கும். மத்திய அரசின் போர்ட்டலில் எத்தனை மடிக்கணினிகள் மற்றும் கணினிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதை நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நிறுவனங்கள் மடிக்கணினிகள், கணினிகள் மற்றும் டேப்லெட்டுகளை இறக்குமதி செய்ய நிறுவனங்கள் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும்.

"நம்பகமான இடங்களிலிருந்து" தங்கள் வினியோகங்களை மறுசீரமைப்பதன் காரணமாக நிறுவனங்களுக்கு நீட்டிப்பு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகத்தால் நிர்வகிக்கப்படும் “இறக்குமதி மேலாண்மை அமைப்பு” போர்டல் இந்த மாத இறுதிக்குள் செயல்படத் தொடங்கும் என்று தொழில்துறையினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. “மின்னணுப் பொருட்களின் மீதான திடீர் இறக்குமதி தடை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த காலக்கெடுவை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இப்போது, நாம் எந்த உரிமத்தையும் பெறத் தேவையில்லை, ஆனால் பதிவு செய்ய வேண்டும். இந்த காலகட்டத்தில், நிறுவனங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் இறக்குமதி செய்யலாம், ”என்று வட்டார  தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகஸ்ட் 4 ஆம் தேதி, திடீரென மடிக்கணினிகள் மற்றும் கணினிகள், டேப்லெட்டுகளுக்கு தடை விதித்து அரசு அறிவித்தது. பின்னர், தடை ஏதும் இல்லை என்று தெளிவுபடுத்தியது, ஆனால் நவம்பர் 1, 2023 முதல் இந்த பொருட்களை இறக்குமதி செய்ய மின்னணு உற்பத்தி நிறுவனங்களுக்கு உரிமம் தேவை என்ற நிலை நிலவியது.

இந்த நிலையில் குஜராத்தின் சனந்தில் மைக்ரோன் டெக்னாலஜியின் செமிகண்டக்டர் சோதனை மற்றும் அசெம்பிளி ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழாவின் போது, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “தொடர்பு இடைவெளி இருந்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன்; இது ஒருபோதும் உரிமத் தேவையாக இருக்கவில்லை. இன்று, தொழில்துறை பிரதிநிதிகளை சந்தித்து, இறக்குமதி மேலாண்மை அமைப்பின் வரைவை பகிர்ந்து கொள்கிறோம். சரிபார்க்கப்படாத மற்றும் நம்பகமான ஆதாரங்களைச் சார்ந்திருப்பதை நிவர்த்தி செய்வதே இதன் நோக்கம்,” என்றார் 

மேலாண்மை அமைப்பு, டிஜிட்டல் இந்தியா சுற்றுச்சூழலுக்குள் நுழையும் உபகரணங்கள், சேவையகங்கள் மற்றும் மடிக்கணினிகள் நம்பகமான மூலங்களிலிருந்து உருவாகின்றன என்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் இது உரிமம் அல்ல, இறக்குமதி.

மேலும் தற்போது, 80 சதவிகித சாதனங்கள் இறக்குமதியில் இருந்து வருகின்றன, மேலும் இந்த ஆதாரங்கள் நம்பகமானவை என்பதை உறுதி செய்வதே குறிக்கோள் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

மடிக்கணினிகள், கணினிகள் மற்றும் சர்வர்கள் போன்ற ஐ.டி ஹார்டுவேர்களை "நம்பகமான" நாடுகளில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் என்ற திட்டத்தில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும், புதுதில்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே அதிகரித்து வரும் பிளவுக்கு மத்தியில் சீனாவில் இருந்து இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மற்றும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு,  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com