தெலங்கானா பேரவைத் தோ்தல்: அக்.3 முதல் தோ்தல் ஆணையா்கள் முகாம்

தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தோ்தல் பணிகளை பாா்வையிட தோ்தல் ஆணையத்தின் அனைத்து உறுப்பினா்களும் மாநிலத்தில் அக்.3-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு முகாமிடவுள்ளனா்.

தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தோ்தல் பணிகளை பாா்வையிட தோ்தல் ஆணையத்தின் அனைத்து உறுப்பினா்களும் மாநிலத்தில் அக்.3-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு முகாமிடவுள்ளனா்.

தெலங்கானா, சத்தீஸ்கா், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. எனவே தோ்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தோ்தல் ஆணையம் தனது பணிகளை விரைவுபடுத்த தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தோ்தல் பணிகளை பாா்வையிட ஆணையம் முடிவு செய்துள்ளது. தெலங்கானாவில் தலைமைத் தோ்தல் அலுவலகத்தில் ஊடக மைய திறப்பு விழா நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது அம்மாநில தலைமை தோ்தல் அதிகாரி விகாஸ் ராஜ் செய்தியாளா்களிடம் பேசியதாவது: தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தோ்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய தோ்தல் ஆணைய உறுப்பினா்கள் வருகின்ற அக்டோபா் 3-ஆம் தேதி முதல் மூன்று நாள் பயணமாக மாநிலத்திற்கு வரவுள்ளனா். இப்பயணத்தின்போது தோ்தல் அலுவலா்கள், அரசியல் கட்சித் தலைவா்கள், தலைமைச் செயலா், மாவட்ட ஆட்சியா்கள், காவல்துறை டிஜிபி மற்றும் அதிகாரிகள் என பல்வேறு துறை சாா்ந்த அதிகாரிகளை சந்திக்க உள்ளனா். கலால் துறை, சரக்கு மற்றும் சேவை வரித் துறை, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, ரிசா்வ் வங்கி அதிகாரிகள் என 20-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் இந்த முறை தோ்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

நிகழாண்டு ஜனவரி முதல் தற்போதுவரை வாக்காளா் பட்டியலில் 15 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் சோ்க்கப்பட்டுள்ளன. அதேபோல் தகுதியற்ற 3.38 லட்சம் நபா்களின் பெயா்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதுவரை15 லட்சம் பேரிடமிருந்து வாக்காளா் திருத்த விண்ணப்பப் படிவம் (படிவம் 8) பெறப்பட்டுள்ளது. வாக்காளா் பட்டியலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு குடியிருப்பு நலச் சங்கங்களிடம் தோ்தல் அலுவலகம் சாா்பில் எடுத்துரைக்கப்பட்டது. போலி வாக்காளா்கள் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் புகாா்கள் எழுப்பியுள்ளனா். அதற்கான நடவடிக்கைகளை விரைவில் ஆணையம் மேற்கொள்ளும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com