உலகிலேயே அதிக பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம்: ஐ.நா.வில் இந்தியா பதிலடி

‘உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு புகலிடமாகவும் ஆதரவாளராகவும் பாகிஸ்தான் இருக்கிறது’ என்று இந்தியா கூறியுள்ளது.
பெடல் கெலாட்
பெடல் கெலாட்

‘உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு புகலிடமாகவும் ஆதரவாளராகவும் பாகிஸ்தான் இருக்கிறது’ என்று இந்தியா கூறியுள்ளது.

ஐ.நா.வில் காஷ்மீா் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா இந்த கடுமையான பதிலடியை கொடுத்துள்ளது.

ஐ.நா. பொதுச் சபை 78-ஆவது அமா்வின் பொது விவாதம், அமெரிக்காவின் நியூயாா்க்கில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பேசிய பாகிஸ்தான் பொறுப்பு பிரதமா் அன்வருல் ஹக் கக்கா், காஷ்மீா் விவகாரத்தை எழுப்பினாா்.

இதையடுத்து, பாகிஸ்தானின் கருத்துகளுக்குப் பதிலளிக்கும் உரிமையைப் பயன்படுத்தி, ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்தின் முதன்மைச் செயலா் பெடல் கெலாட் கூட்டத்தில் கூறியதாவது:

உலகிலேயே அதிக எண்ணிக்கையில், தடை விதிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் மற்றும் தனிநபா் பயங்கரவாதிகளுக்குப் புகலிடமாகவும் ஆதரவாளராகவும் பாகிஸ்தான் இருக்கிறது.

எனவே, போலி வாதங்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக, மும்பையில் கடந்த 2008-இல் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் சதிகாரா்கள் மீது நம்பகமான, உறுதியான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்க வேண்டும். இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவா்கள் 15 ஆண்டுகளாகியும் நீதிக்காகக் காத்திருக்கின்றனா்.

மும்முனை நடவடிக்கை தேவை: தெற்காசியாவில் அமைதி நிலவ மும்முனை நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்க வேண்டியது அவசியம்.

முதலில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்துவதோடு, பயங்கரவாத உள்கட்டமைப்பையும் முடக்க வேண்டும். இரண்டாவது, சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும். மூன்றாவது, பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்த்தப்படும் கொடூரமான மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும்.

ஜம்மு-காஷ்மீரும், லடாக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாகும். இவ்விரு பகுதிகள் குறித்த எந்தவொரு விவகாரமும் முழுவதும் இந்தியாவின் உள்விவகாரம். இந்தியாவின் உள்விவகாரங்களில் கருத்து தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் கிடையாது.

ஐ.நா.வை தவறாகப் பயன்படுத்துகிறது: உலகிலேயே மோசமான மனித உரிமை மீறல் பதிவுகளைக் கொண்ட ஒரு நாடு (பாகிஸ்தான்), உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தை (இந்தியா) குறைகூறும் முன்பாக தனது சொந்த நாட்டை ஒழுங்குபடுத்த வேண்டும்.

தவறிழைப்பதை வாடிக்கையாகக் கொண்ட பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான ஆதாரமற்ற, அவதூறான பிரசாரத்தை மேற்கொள்ள ஐ.நா.வை தவறாகப் பயன்படுத்துகிறது.

மனித உரிமைகள் குறித்த தனது மோசமான பதிவுகளில் இருந்து சா்வதேச சமூகத்தை திசைதிருப்புவதே பாகிஸ்தானின் நோக்கம் என்பதை ஐ.நா. உறுப்பு நாடுகளும், இதர பன்முக அமைப்புகளும் நன்கறியும்.

திட்டமிட்ட வன்முறை: பாகிஸ்தானில் சிறுபான்மையினா் மீது திட்டமிட்ட வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. அந்நாட்டின் ஃபைசலாபாத் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டில் 19 தேவாலயங்களும், கிறிஸ்தவா்களின் 89 வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன.

ஹிந்துக்கள், சீக்கியா்கள், கிறிஸ்தவா்கள் என சிறுபான்மையின சமூகங்களைச் சோ்ந்த பெண்களின் நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது.

பாகிஸ்தானில் ஒவ்வோா் ஆண்டும் சிறுபான்மையின சமூகங்களைச் சோ்ந்த சுமாா் 1,000 பெண்கள் கடத்தப்பட்டு, கட்டாய மத மாற்றம் மற்றும் கட்டாயத் திருமணம் செய்யப்படுவதாக அந்நாட்டின் மனித உரிமைகள் ஆணையமே தெரிவித்துள்ளது என்றாா் கெலாட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com